கிளிநொச்சியில் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 32 மாணவர்கள் கல்வி இடை விலகியுள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளர். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முதல் காலாண்டுக்கான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது, சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 32 மாணவர்கள் கல்வி செயற்பாட்டிலிருந்து இடை விலகியதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 29 பேர் மீள் இணைக்கப்பட்டதாகவும் புள்ளிவிபர பட்டியலில் குறிப்பிடப்பட்டது.
மேலும் இருவர் மீள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 11 மாணவர்களும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 02 மாணவர்களும் அடையாளம் காணப்பட்டு மீள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 05 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு மூவர் கல்விக்காக மீள் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 14 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு 13 பேர் மீள் இணைக்கப்பட்டுள்ளனர்.
குடும்ப பொருளாதாரம், வறுமை, பெற்றோரின் அக்கறையின்மை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு மாணவர்களின் கல்வி இடைவிலகவிற்கான அதிக காரணமாக அமைந்துள்ளதாக உத்தியோகத்தர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை ஒழுக்காற்று நடவடிக்கை எனும் பெயரில் 6 மாதங்கள் வரை மாணவர்களை இடை நிறுத்திய சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஒழுக்காற்று நடவடிக்கையினால் இடைவிலகல் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் எனவும், அவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படின் அவ்விடயம் தொடர்பில் அறிவித்தல் வழங்கப்பட வேண்டும்.
வலயக் கல்வி பணிமனைக்கு அறிவித்தல் வழங்கப்படும் அதே வேளை, பிரதேச செயலகத்துக்கும் அறிவித்தலை வழங்க வேண்டும்.
பாடசாலை கல்வி, பாதுகாப்பு தொடர்பில் தொடர் அதிக கண்காணிப்பு அவசியம் எனவும், பிரதேச செயலகங்களில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கூட்டங்களை நடத்த வேண்டும் எனவும் பதில் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
சிறுவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வையும், ஆலோசனைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ் தெரிவித்தார்.