
இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலைமுதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் ஒரு மீனவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
குறித்த மீனவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் யாழ் தையிட்டி அன்னை வேளாங்கணி கடற்றொழில் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேநேரம் நடைமுறைச் சாத்தியமற்றதென தெரிந்தும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பொராட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வகிபாகத்தை அழைப்பு விடுக்காமலும் தானாக ஒட்டிக்கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகளும் செய்திகளும் விடுப்பவர்கள் எமது இந்த வாழ்வாதார பிரச்சினைக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்பது வேதனையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.