வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் தலையிட அதிகாரமுள்ள தரப்பாக இருக்கும் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காக்குமாக இருந்தால், தமிழ் மக்களின் ஆதரவை முற்றாக இழக்கும். இது வேறு தரப்புக்களுக்கு வாய்ப்பாக அமையும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
‘தென்மராட்சி மெகா பிறிமியர் லீக் – 2023’ கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதியாட்டம் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் திங்கட் கிழமை மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைதியாக வழிபாடு நடத்தியவர்கள் கைதாகி மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிணையில் அவர்கள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக தொல்பொருள் சட்டங்களின் கீழ் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்தப் பிராந்தியத்தில் வல்லரசாக நிலைநிறுத்த முயற்சிக்கும் இந்தியாவே, இந்து மதத்தின் காவலனாகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கின்றது. வெடுக்குநாறிமலையில் நடப்பதும் இந்தியாவுக்குத் தெரியும். ஆனால் இந்தியா மௌனம் காக்கின்றது.
1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இங்கு கால்பதித்தபோது எமது மக்கள் மாலை மரியாதையுடன் வரவேற்றார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அவர்கள் இங்கிருந்து போனால்காணும் என்ற நிலைமை உருவானது. இதை உருவாக்கியது யார்? எமது மக்களிடம் வெறுப்பை அவர்களே சம்பாதித்துக்கொண்டார்கள்.
இறுதிப் போரின்போதுகூட கடைசிக்கணத்திலாவது இந்தியா தலையிட்டு எம்மைக் காப்பாற்றும், எதையாவது செய்யும் என்று ஒவ்வொரு தமிழனும் நம்பிக்கொண்டிருந்தான். ஆனால் அதில் எல்லாம் மண் அள்ளிப்போட்டது இந்தியா.
இப்போதும்கூட எமது மக்கள் இந்தியாவை முற்றாக வெறுக்கவில்லை. அவர்களிடம் இந்தியாவைப்பற்றி இருக்கின்ற கடைசி நம்பிக்கையைக் கூட தக்கவைப்பதற்கு அவர்கள் முயலவில்லை என்பதுதான் கவலையாக இருக்கின்றது.
பூகோள அரசியல் போட்டியால் சீனா இங்கு கால்பதித்துவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்காவின் பௌத்த – சிங்களப் பேரினவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கின்றது இந்தியா. பெரும்பான்மையினத்திடம் சரணாகதி அடைந்திருக்கின்றது இந்தியா. இலங்கையை அதட்டி தமிழருக்கான நீதியைக்கேட்க வேண்டிய இந்தியா, சிங்கள அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றது.
வெடுக்குநாறிமலை விவகாரத்தில் தமிழர்களின் குரலுக்கு பௌத்த – சிங்களப் பேரினவாதத்தில் ஊறித்திளைத்த அரசு செவிசாய்க்கப்போவதில்லை. சிறிலங்கா அரசை கேள்விகேட்கும் இடத்தில் இருப்பது இந்தியா மாத்திரம்தான். ஆனால் இந்தியாவும் தனது பிராந்திய நலனுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. ஆனால் இந்தியா அதைச் சீண்டிக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களிடத்திலிருந்து இந்தியா தூர விலகிச் சென்றுகொண்டே இருக்கின்றது. இது இந்தப் பிராந்தியத்தில் வேறு சக்திகள் தங்களை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தும். வெள்ளம் வந்த பின்னர் அணைகட்டுவதால் பலனில்லை. இந்தியா இதைக் கவனத்தில்கொள்வது நல்லது, என்றார்.