வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு சிங்கள முகப்பு ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதியாக வழங்கப்படும் தீர்ப்பைக்கூட சிங்கள பேரினவாதத்தால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான் இந்த சிங்கள முகநூல் செய்தி மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுகின்றது.
தான் விரும்பும் மதத்தை வணங்கமுடியாத நாட்டில் எப்படி உங்களினால் நல்லிணக்கம்பற்றி வாய் கிழிய கத்த முடியும் ? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டும் இருப்பதல்ல.
அது ஓர் இன மக்களை அனுசரித்தது நடப்பதில்தான் அது உள்ளது. எனவே வெடுக்குநாறி மலையில் இந்து மக்கள் வழிபட எந்த தடையும் இனிமேல் இருக்கக்கூடாது.
இந்தப்பிரச்சினைக்கு முழுமையான காரணம் தொல்பொருள்துறைக்கு அமைச்சராக இருக்கின்ற விதுர விக்ரமநாயக்கதான்.
அவர் ஒரு நேர்மையாக கள்ளம் கபடமற்று இதய சுத்தியோடு செயற்படுவாரேயானால் இனங்களை மதித்து செயற்படுவாரேயானால் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்க நியாயமில்லை .
வெட்டுக்குநாறிமலையில் தொல்லியல் திணைக்களமும் காவல்துறையினரும் அராஜகமாக நடந்து கொண்ட முறை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் நான் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.