நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன் சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டதானது, அரசியல் அமைப்பையும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் சட்டத்தையும் மீறியிருப்பதாகவும், உயர் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகவும் தெரிவித்தே எதிர்க் கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதே நேரம், 2024ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமானது அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டதாகவும் ஒரு கதை புனையப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் 2016 ஆம் ஆண்டு நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டது. அத்துடன், சிங்கப்பூர் நாட்டில் செயற்பட்டு வருகின்ற 11 சமூக வலைத் தளங்களின் முகவர்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன்போது, சமூக வலைத்தளங்களில் சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் கோவையினை அறிமுகப்படுத்துவதாக அந்த முகவர் நிறுவனங்கள் தெரிவித்திருந்த போதிலும், அது சாத்தியமாக்கப்படாத நிலையில்தான் இந்த சட்டம் சுய ஒழுக்கக் கோவையை முதன்மைப்படுத்தி இயற்றப்பட்டிருக்கின்றது.
நாடாளுமன்றத்தின் சட்டங்களை இயற்றுகின்ற ஏற்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவாளர் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்ததாகவே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இதன்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு மாறாக அல்லது அரசியல் அமைப்பிற்கு முரணாக செற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்றே கருத முடிகிறது.
அந்த வகையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் அதனை உறுதி செய்ததன் பின்னரே இந்த நிகழ்நிலை காப்புச் கட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதன் அடிப்படையில்தான், அரசியல் அமைப்பின் 78 (1) மற்றும் (2) மற்றும் 79ஆம் பிரிவுகளின் அடிப்படையில் மிகச் சரியாகவே சபாநாயகர் 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
அடுத்ததாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதையும் சபாநாயகரால் அல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும், பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் அவர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் அரசியல் அமைப்பினை சபாநாயகர் அவர்கள் மீறியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பினரால் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் அமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கின்ற எட்டு உறுப்பினர்களில் நான்கு உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இருவர் எதிர்ப்பு தெரிவித்தும், இருவர் வருகை தராத நிலையிலுமே, பெரும்பான்மை ஆதரவுடன் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகவே தெரியவருகின்றது.
அந்த வகையிலே சபாநாயகர் அவர்கள் சரியான முறையிலேயே இதனை மேற்கொண்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது