
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவை மடி தொழிலை மேற்கொள்ளும் இந்திய மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்று(22) காலை முற்றுகையிட்டுள்ளனர்.
மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை(19) முதல் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காததால் பொறுமை இழந்த மீனவர்கள் இன்றையதினம்(22) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டனர் .
இந்நிலையில், பொலிஸார் மீனவர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் மீனவர்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது
பின்னர் மீனவ பிரதிநிதிகள் 6 பேர் இந்திய துணைத்தூதரக அலுவலகத்துக்குள் உள்வாங்கப்பட்டு கலந்துரையாடலை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.