ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் நேற்றிரவு(22) மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் 145 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களுள் 5 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுவதுடன் 30 பேர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உருமறைப்பு உடையணிந்த தாக்குதல்காரர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், கையெறி குண்டு அல்லது தீக்குண்டு வீசியதாக சம்பவ இடத்தில் இருந்த வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று நடந்த பயங்கர துப்பாக்கித் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது,
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் “ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகரில் ஒரு பெரிய கூட்டத்தைத் தாக்கினர்” என்று அதன் டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபராக புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இச்சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.