உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்? மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும்…!

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்ல வளாகத்தில் இன்றையதினம்(23)  ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை தெரியும் என பகிரங்கமாக கூறுகிறார். இது ஒரு அதிர்ச்சி தகவல் குண்டு.

இது தொடர்பில் பொலிஸார் உடனடியாக மைத்திரிபாலவை அணுகி, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி பற்றிய தகவல்களை வாக்குமூலமாக பெற வேண்டும்.

அதுபோல், இத்தனை நாள் ஏன் இந்த தகவலை அவர் மறைத்து வைத்தார் என்ற கேள்விக்கும் பதிலை வாக்குமூலமாக பெற வேண்டும்.

இந்த இரண்டு வாக்குமூலங்களின் அடிப்படையில் உடனடியாக ஸ்ரீலங்கா பொலிஸ் விசாரணைகளை முடுக்கி விட்டு, குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும்.

அதேவேளை, நீதிமன்றம் கேட்டால் தான் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி பற்றிய தகவல்களை தருவேன் எனவும், அந்த தகவல்களை நீதிபதிகள் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.

நீதிமன்றம் இவரை தேடி வந்து கோராது. இவர்தான் பொலிசை தேடி சென்று தகவல்களை வழங்க வேண்டும். குற்றவாளி பற்றிய தகவல்களை அறிந்த இவர் இதுபற்றி இதுவரை மௌனமாக இருந்தமை குற்றமாகும்.

தான் தரும் தகவல்களை நீதிபதிகள் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஏன் இவர் கூறுகிறார் என எனக்கு விளங்கவில்லை. பொதுமக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு பெற்று வாழும் இவர் யாரை கண்டு பயப்படுகிறார் எனவும் எனக்கு தெரியவில்லை.

இதுபற்றிய ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்த போது இதுபற்றி ஏன் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தான் அறிந்த உண்மை தகவல்களை கூறவில்லை என்பதற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதில் கூறி ஆக வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி பற்றிய தகவல்களை இதுவரை மறைத்து வைத்தமைஇ  மைத்திரிபால சிறிசேனவை பிடித்த ஒரு குற்றவியல் நோய். இந்த நோய் இலங்கை பொலிஸிற்கும்  வந்துவிடாமல் பொலிஸ் துறை அமைச்சர் டிரான் அலசும், பொலிஸ் மாஅதிபரும் கவனமாக  செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews