எந்தவகையான தேர்தலையும் முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது என அக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியானது எந்தத் தேர்தலிலும் பெருவெற்றி பெறும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் தான் தற்போது ஆளும் தரப்பினர் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முனைப்புக்காண்பிக்கும் அதேநேரம், பாராளுமன்றத் தேர்தலை முன்னெடுப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகத் தலைவர் பஷில் ராஜபக்ஷ முயற்சிக்கின்ற நிலையில் பிரதான எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாகவே இருக்கின்றோம். அந்த வகையில் தேர்தல்கள் தாமதிக்கப்படாது, அது உரியவகையில், உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் எனப்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் அத்தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் மிகப்பெரும்நெருக்கடிகளை ஆளும் தரப்பு முகங்கொடும் என்றார்.