புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும்,
கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்த போதும், தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவையில் நேற்று (23) நடைபெற்ற “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் என்றும் எனவே,தங்களினதும் நாட்டினதும் எதிர்காலத்திற்கான சிறந்த வழி எதுவென்பதை நாட்டின் இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சரிவடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடினோம்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ள நிலையில்,
எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
இந்தக் கலந்துரையாடல்களின் பின்னர் எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அந்த நாடுகளின் உதவிகள் கிட்டும். அதனால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது.
நாம் இன்னும் இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தையே கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடத்திலும் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக காணப்படுகிறது. அந்த இடைவௌியை சரிசெய்ய மீண்டும் கடன்களைப் பெறுகிறோம்.
இந்நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிவிடுவோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.