
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் குற்றவியல் நடைமுறைச்சட்டம், தண்டனைசட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்டவற்றின் விதிகளை மீறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் ஏன் அவர் இந்த முக்கியமான விடயத்தை மறைத்துவைத்தார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
சிஐடியினரும் ஏனைய சம்பந்தப்பட்டதரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமா அதிபரும் சிஐடியினரும் மைத்திரிபால சிறிசேனவின் கூற்றுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் மனுவை மேல்முறையீட்டுநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயார் என சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் மைத்திரிபால சிறிசேன குற்றம்செய்துள்ளார். அவரை உடனடியாக கைதுசெய்யவேண்டும். விசாரணை செய்யவேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி அமில உடவத்த தெரிவித்துள்ளார்.
சிறிசேன குற்றமிழைத்துள்ளார் அவரை உடனடியாக கைதுசெய்து தடுத்துவைத்து விசாரணை செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.