இலங்கையில் பாடாசாலைகளை மீண்டும் திறப்பதற்கும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் நேரடி தொடர்பு இல்லை என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஹேமந்த ஹேரத் கூறினார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தி மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் திறப்பது மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது என்ற இரண்டும், வெவ்வேறு அம்சங்கள் என்று நிபுணர் குழு திட்டவட்டமாக கோடிட்டுக் காட்டியுள்ளதாக தெரிவித்தார்.
“நாட்டில் நாளாந்த கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை, பாடசாலைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தாமதமான தேர்வுகள் எதிர்காலத்தில் எவ்வாறு நடத்தப்படும் என்பதற்கான வாய்ப்புகள் போன்ற காரணிகள், பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார். இருப்பினும், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் போது, விஞ்ஞானத் தரவு மற்றும் நிபுணர் குழு முன்வைக்கும் பரிந்துரைகளின் படி தனித்தனியாக முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பாடசாலைகளுக்கு திரும்புவதற்கு முன் கல்வி அமைப்புகள், தடுப்பூசிக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று உலக வங்கி கருத்து தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் அனுபவங்களின்படி போதிய தணிப்பு உத்திகளுடன், பாடசாலைகள் திறக்கப்பட்டமை, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகங்களிடையே நோய் பரவுவதற்கு குறைந்த அபாயங்களை கொண்டிருந்ததாக உலக வங்கியின் கல்வி குழு குறிப்பிட்டுள்ளது. இந்த பின்னணியில், 200 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க இலங்கை அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.