
யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இன்று(26) காலை இடம்பெறவிருந்த அளவீட்டுப்பணி மக்களின் பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். வலி வடக்கு கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர்.
இந்நிலையில், நீண்ட நேர காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
அதேவேளை குறித்த பகுதியில் அதிகமான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இன்று குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.