ஐக்கிய மக்கள் சக்தியின் பராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒரேடியாக ரணில் விக்ரமசிங்வுடன் இணைந்துகொள்வது குறித்த இரகசிய பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல செயற்பாட்டாளர் ஒருவரின் நுகேகொடையில் உள்ள இல்லத்தில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உறுப்பினர்களை கழற்றி எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மொட்டுக் கட்சியில் உள்ள வியத்மக குழுவினரும் மொட்டுக் கட்சியை சுற்றியுள்ள ஓய்வுபெற்ற முப்படையினர் பிரேமதாசவின் நெருக்கமானவர்களாக நியமிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவரிடம் இருந்து விலகிச் செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
அதைப்போல, ஐக்கிய மக்கள் சக்தியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் அணியும் நேரடியாக ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துகொள்ளாது சுயாதீனமாகவிருந்து ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறு சஜித் பிரேமதாசவிடம் இருந்து பிரிந்து செல்லும் பலர் வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்றும், அதற்கடுத்த பிரிவு தென்மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அறிய முடிகிறது. மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் சஜித்திடம் இருந்து விலகிச் செல்வதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.