வலி வடக்கு உயர் பாதுகாப்பு நிலையத்தில் இரும்புத் திருடர்கள் செல்லலாம் என்றால் ஏன் ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என வட மாகாண ஆளுநரை பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.
நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் உயர் பாதுகாப்பு வலையம் தொடர்பான ஆளுநரின் கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அபிவிருத்தி குழு கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் வழி வடக்கு உயர் பாதுகாப்பு நிலையத்தில் உள்ள ஏழு ஆலயங்களில் வழிபாட்டுக்கு சென்று வர பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆலயத்துக்கு செல்லும் போது ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் உயர் பாதுகாப்பு நிலையத்துக்குள் ஊடகவியலாளர்களை அனுமதிக்கும் நடைமுறை இல்லை இதன் கட்டுப்பாடு தன்னிடம் இல்லை என தெரிவித்தார்.
இதன் போது குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உயர் பாதுகாப்பு நிலையத்திற்குள் இருக்கும் சீமெந்துத் தொழிற்சாலையின் இரும்புகள் சாதாரணமாக களவாடி செல்லப்படுகிற நிலையில் ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
மறுபடியும் பாதுகாப்பு தொடர்பான பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தனது அதிகாரத்துக்கு உட்படாது என ஏன் நீங்கள் ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்லவுள்ளீர்கள் என ஆளுநர் கேள்வி எழுப்பினார்.
பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஏற்கனவே உயர் பாதுகாப்பு நிலையத்துக்குள் இருந்த மக்களுடைய காணிகளில் தையிட்டி விகாரையை அமைத்து விட்டார்கள் அவ்வாறு ஏதேனும் விகாரகள் அமைத்திருந்தால் ஊடகவியலாளர்கள் அதனை வெளிப்படுத்துவார்கள் அதுதான் அவர்களை அனுமதிக்குமாறு கேட்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.