பாலஸ்தீன விவகாரத்தில் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைந்திருந்தது என்பதை எமது இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் தீர்வைத் தரும் என மக்களை ஏமாற்றுகின்ற சக்திகள் தெரிந்துகொள்ள வேண்டும். என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (02.04.2024) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியதுடன் அது தொடர்பில் மேலும் கூறுகையில்,
இலங்கையை பொறுத்தளவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக கூறப்படுகின்ற நிலையில் மார்ச் 12 இயக்கம் இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தர தீர்வைகாணவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக 13 ஆவது திருத்தத்தையாவது உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் எனவும் மார்ச்ச 12 இயக்கத்தின் மாநாட்டில் பேராசிரியர் அர்ஜீன பாராக்கிரம வலியுறுத்தியுள்ளார். இதனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வரவேற்கின்றோம்.
இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நீண்டகாலமாக எமது அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான அடிப்படையாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடான மாகாண முறைமையை குறிப்பாக 13 ஆவது அரசியலமைப்பை முன்னெடுப்பதனூடாக எமது அரசியல் தீர்வுக்கான வழியை நோக்கி நகர முடியும் என்பதை வலியுறுத்திவந்திருக்கின்றது.
இதனை அன்று நிராகரித்த இன்று பலர் புதுடில்லிவரை சென்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அதிலும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பேசமுனைந்துள்ளனர்.
தற்போது தூய்மையான அரசியல் காலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் இதனை வலியுறுத்த முனைந்தது ஒரு மாற்றத்தின் முதற்படியாகவே எண்ணுகின்றோம்.
இதனையே வடக்கு கிழக்கை சேர்ந்த சக்திகள் பின்பற்றவேண்டும். மாறாக சர்வதேசம்தான் எமது பிரச்சினைக்கான தீர்வைத்தரும், அல்லது சர்வதேசத்திடம் எமது ஒற்றுமையை காண்பிக்க வேண்டும் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும் என மக்களை ஏமாற்றும் தேசியம் பேசுகின்ற சக்திகள் பாலஸ்தீனம் தொடர்பாக தென்னாபிர்க்கா தொடுத்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் எவ்வாறான தீர்ப்பை வழங்கியது என்பதையும் மீளாய்வுசெய்ய வேண்டும்.
ஆகவே காலங்காலமாக தேர்தல் காலங்களில் மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமற்ற கவற்சிகரமான எழுச்சியான ஆக்ரோசமான கோசங்களை முன்வைப்பதால் எமது மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வு பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.
எனவே எமது நீண்டகால வலியுறுத்தலாக இருந்த மாகாண முறைமையை நடைமுறைப்படுத்த அனைவரும் பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.