மதுபோதையில் ஆட்டோவில் வந்த சுன்னாகப் பொலிஸர் தவறிழைத்ததாக கூறப்படும் நபரின் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டதுடன் அதனை உறுதிப்படுத்தும் சிட்டையை வழங்கிய பின்னர் பொலிஸாரின் கடமைக்கு என்ன இடையூறு விளைவிக்கப்பட்டது?
விசேட அதிரடிப் படையின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்கிறார்கள். இது என்ன அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. என்பதை எங்களால் உணர முடியவில்லை என ஊரெழு பொக்கணை விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ஊரெழு – பொக்கணை பகுதி கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுகின்ற நிலையில் இரவு நேரத்தில் முச்சக்கரவண்டியில் வருகை தந்த சுன்னாகம் பொலிஸார்
வீதிக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ததாகக் கூறி இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தினர். இதன்போது குறித்த இளைஞனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் அயல் வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வீதிக்கு வந்தனர்.
அவ்வாறு வந்தவர்களை பொலிஸார் விரட்டியபோது இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கி வேட்டுகளை தீர்த்தனர். அதன் பின்னர் சுமுகமான நிலைப்பாட்டுடன் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை நேரம் விசேட அதிரடிப்படையை அழைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று வீட்டில் இருந்த பெண்களை தாக்கி விட்டு மூவரை சுன்னாகம் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுன்னாகம் பொலிஸார் இரவு நேரத்தில் முச்சக்கரவண்டியில் வந்தது எதற்கு? என்ன பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பினார். சுன்னாகம் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றவர்களை
பார்ப்பதற்குச் சென்றபோது அவர்கள் அங்கு இல்லை என முதலில் மறுத்து விட்டனர். இதனால் ஒவ்வொருவரும் தேடி அலைந்த பின்னர் இறுதியில் சுன்னாகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. காலையில் கைது செய்தவர்களை மாலைவரை
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த பின்னர் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். போக்குவரத்துக் குற்றத்துக்காக பொலிஸ் சான்றிதழ் வழங்கி விட்டு கடமைக்கு இடையூறு விளைவித்தாக மறு நாள்
தமது உறவினர்களைக் கைது செய்தமை பொலிசாரின் அத்துமீறிய செயற்பாடாகப் பார்க்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.