பொலன்னறுவையில் புதையல் மூலம் கிடைத்த விலைமதிப்பற்ற தங்கக் காசுகள் எனக் கூறி 40 லட்சம் ரூபாய் பெறுமதியான 810 போலி தங்க நாணயங்களை மனம்பிட்டிய உள்ள நபரொருவருக்கு விற்பனை செய்யச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை குவாரி பகுதியில் வசிக்கும் 47, 23, 18 வயதுடைய தாய், மகள் மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் போலி தங்க நாணயங்களுடன் கைது செய்யப்பட்ட போது தந்தை தப்பி சென்றுள்ளதாக பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சோதனையின் போது தங்கக் காசுகள் எடை அளவிட பயன்படுத்தப்பட்ட தராசு மற்றும் 6 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரலகங்வில பிரதேசத்தில் உள்ள வங்கி முகாமையாளரிடம் இதற்கு முன்னர் போலி தங்க நாணயங்கள் வழங்கிவிட்டு 20 லட்சம் ரூபாவை பெற்றுள்ளதாக இந்த குடும்பத்தினர் மீது மெதிரிகிரிய பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.