கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பழைய வட்டக்கச்சி பகுதியில் தனியார் ஒருவரது தென்னந் தோப்பு வெண் ஈ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது வீட்டில் உள்ள பயன் தரும் வாழை, பூ மரங்கள், தோடை, எலுமிச்சையும் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக பண்ணையாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், நாளாந்தம் பயன்படுத்தும் தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் வெண் ஈ தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாகவும்,
தரையில் வரும் புற்களில் கூட பரவி சுவாசிக்ககூட முடியாத நிலையில் வெண் ஈ தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் நேரில் பார்வையிட்டு தமக்குரிய தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வெண் ஈ தாக்கத்தின் காரணமாக தண்ணீர் மாசடைந்துள்ளதாகவும், அதனை பயன்படுத்துவதால் நோய் தாக்கம் ஏற்படலாம் என அச்சமும் வெளியிடுகின்றார்.
தமது கிணற்றில் உள்ள தண்ணீரை பலர் நாளாந்த தேவைக்காக பயன்படுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.