கொழும்பில் நுகர்வோர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசேட புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் இப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஜயந்தி விஜேதுங்க, சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் எரசிங்க, அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளான சதுர ஹேரத், இரேஸ் ஹேமந்த மற்றும் டி.டி.ஏ பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிகளவிலானோர் தங்களை அழகுப்படுத்த இவ்வாறான பொருட்களை பயன்படுத்தி வரும் நிலையில்,
சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து அவதானம் செலுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.