கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்களின் விசைப்படகின் மீது மோதியதில் கடற்றொழிலாளர்களின் விசைப்படகு சேதமாகியது.
அதேவேளை, குறித்த படகில் இருந்த நான்கு மீனவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குறித்த மீனவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களை தாக்குவதும் கைது செய்வதும் தொடர்கதையாக நடைபெற்று வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.