மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு…!

அரசாங்கம் உடனடியாக அரிசியின்  விலையை   100 ரூபாய்க்கு  கீழ் கொண்டு வருமாறு கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று (9) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அடிப்படை உணவு அரிசிச் சோறு .அந்த வகையில் தற்காலத்தில்  இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருட்களின் விலையேற்றமும் கிராம மட்டங்களில் உள்ள வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் பாரிய உணவு தட்டுப்பாடு மட்டுமல்லாது போசாக்கு குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பல மக்கள் தங்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர்.

குறிப்பாக இலங்கையில் கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்டுள்ள அரிசியின் விலை ஏற்றம் என்பது நாளாந்தம் தினக்கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கும் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களிலும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு வேளைகளில் மட்டுமே உணவிணை பெற்றுக்கொள்ள கூடிய நிலையில் உள்ளனர்.

சில குடும்பங்களில் சோறு இல்லாமல் கஞ்சி காய்ச்சி குடித்து கொண்டு இருக்கின்றனர். பெண் தலைமை தாங்கும் குடுமபங்களில் இந்த அரிசியின் விலை ஏற்றம் இன்னும் பட்டினிக்கு தள்ளியுள்ளது.

தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட யுத்தம் ,கோவிட் தாக்கம், வெள்ளம், வரட்சி மற்றும் தற்கால பொருளாதார நெருக்கடி அடி நிலையிலுள்ள வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உணவுத் தேவையில் அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளது.

சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் பெண்கள் அனைவரும் தமது பசியினைப் போக்குவதற்காக போசாக்கற்ற உணவுகளை உண்ண வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந் நிலையால் நாட்டில் போசாக்கற்ற குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.

நோய்த் தாக்கங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். அத்துடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் வறுமை காரணமாக சாப்பிடாமல் பாடசாலைகளில் மயங்கி விழுந்து உள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

முதியோர்கள்,தொழில் இழந்த ஆண்கள்,வறுமைப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் தரப்பினரும் உணவுக்காக  வீதிகளில் கையேந்துவதை இலங்கை முழுவதும் காணக்கூடியதாகவுள்ளது.

எனவே, இலங்கை அரசு மக்களின் வேண்டுகோளையும் பசியின் கொடூர நிலையையும் கவனத்தில் கொண்டு இலங்கையில் அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழ் உடனடியாக கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். மக்களின் வறுமை நிலை போக்கி மக்கள் மூன்று வேளையும் பசியின்றி சோறு உண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இலங்கை அரசு மக்களின் சோற்றில் கை வைக்காமல் அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் குறைத்து மக்களின் பட்டினிச் சாவை தவிர்த்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இறுதியில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews