
மதவாச்சி – விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இளைஞன் தாக்கப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்யச் சென்றபோது அவர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 7 ஆம் திகதி காயமடைந்த இளைஞன் மற்றுமொரு நண்பருடன் சிறிய லொறியொன்றில் பயணித்த போது, போக்குவரத்து பொலிஸார் லொறியை நிறுத்தியுள்ளனர்.
குறித்த இளைஞன் லொறியை நிறுத்தாது சென்றதால், லொறியின் பின்னால் துரத்திச் சென்ற மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் லொறியை நிறுத்தி தனது மகனையும் அவரது நண்பரையும் தாக்கியதாக இளைஞனின் தாய் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக தனது மகனின் விரைகளில் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மதவாச்சி துலாவெல்லிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய திலிஷா சங்கீத் என்ற இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தன்னையும் தனது நண்பரையும் கடுமையாக தாக்கியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கையில்,
இரண்டு இளைஞர்கள் பயணித்த லொறியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதால் துரத்திச் சென்று கைது செய்ய நேரிட்டதாக தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் சட்டவிரோத மதுபானம் இருந்ததாகவும், பின்னர் வாகனத்தில் இருந்து அதனை வெளியே வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் போது குறித்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும் அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த இளைஞனின் இடது விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்