யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் யாழ், கிளிநொச்சி 3 குடிநீர்த் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்தவாறு இன்று மெய்நிகர் வழியில் ஆரம்பித்து வைத்தார்.
சுபீட்சத்தின் நோக்குக் கொள்கை திட்டத்தின் கீழ் 2025 இல் அனைவருக்கும் தூய குடிநீர் என்ற திட்டத்திற்கமைய யாழ், கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் ஊடாக 187.47மில்லியன் செலவில் முடிவுறுத்தப்பட்ட நயினாதீவில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையமும் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
சுமார் 24 ஆயிரம் கன மீற்றர் கொள்ளளவுடைய கடல்நீரை நன்னீராக்கும் தாளையடி குடிநீர் திட்டத்தின் கீழ், 184 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி சுமார் 822 கிலோ மீற்றருக்கு புதிய குழாய்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன் யாழ்.நகர நீர்க் குழாய்களைப் பதிக்கும் வேலைத்திட்டமும் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணிளவில் இடம்பெற்ற நிகழ்வில் கொவிட் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, , ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் கெசினி யோகோயம உள்ளிட்டோர் அலரி மாளிகையில் இருந்து மெய்நிகர் வழியில் பங்கேற்றனர்.