கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அதன் தொடர்ச்சியான முடக்கத்துக்கு மத்தியில், சுகாதார அதிகாரிகள் டெங்கு நோயாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்தபடி தொடர்ச்சியாக மழை பெய்யும் என்பதால், டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அதிகாரிகளின் தெரிவிக்கின்றனர்.
தற்போது கொரோனா மற்றும் டெங்குவின் அறிகுறிகள் ஒத்ததாக இருப்பதால், தவறான நோயறிதல் பற்றிய கவலையும் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலை குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் நிமல்கா பன்னிலா ஹெட்டி, காய்ச்சல், குளிர், தசை வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் கொரோனா மற்றும் டெங்கு நோய்க்கான பொதுவான அறிகுறிகளாக உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
எவ்வாறிருப்பினும் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளுக்கு வராமல் இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டறிந்தவுடன் மருத்துவ உதவியை நாடுமாறு அவர் வலியுறுத்தினார்.
மேலும் இந்த ஆண்டு இதுவரை சுமார் 19 ஆயிரத்து 700 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் செப்டம்பர் மாதத்தில் ஆயிரத்து 378 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த ஆண்டுக்குள் 10 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்து வகையான கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களிலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு டெங்கு பரவாமல் இருக்க அவற்றை தொடர்ந்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.