மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு திறக்கப்பட்டுள்ளமையால் ஏற்படக்கூடிய தொற்று நிலை குறித்து எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே கண்டறியப்படும்.
கோவிட் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 55 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட ரீதியில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவிலேயே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக 40 நாட்கள் வரை நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த முதலாம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும், போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.