பிரித்தானியாவை போன்று கனடாவிலும், கனரக வாகன ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கனடா அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் பிரித்தானியாவில் கனரக ஓட்டுநர்கள் பணியில் கடும் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தற்போது எரிபொருள் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. இதே நிலைமையானது தற்பொழுது கனடாவிலும் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரெக்சிட் விவகாரம் தவிர்த்து ஏனைய அனைத்து காரணிகளும் தாக்கம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில் சுமார் 18,000 ஓட்டுநர்கள் பணியிடங்கள் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கணிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வரும் 2025ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 17,230 ஓட்டுநர்கள் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவில் கனரக வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறைக்கு முக்கிய பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. தற்போது வாகன ஓட்டுநர்களில் 37 வீதம் பேர் குறைந்தபட்சம் 55 வயதை எட்டியவர்கள்.
இவர்களும் விரைவில் ஓய்வுபெறும் நிலையில் உள்ளதால் ஓட்டுநர்களுக்கான வெற்றிடம் அதிகமாகிவிடும். அதிலும் இளைஞர்கள் கனரக வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியவில்லை என்று தெரிவிப்பதாக கூறப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு அதிக பணிச்சுமையாக உள்ளது. அத்துடன், கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி மற்றும் ஓட்டுனர் உரிமத்திற்காக 60,000 முதல் 70,000 டொலர்கள் செலவாகும்.
இதனால் இப்பணியை தேர்ந்தெடுப்பதற்கு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு கனடா அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.