அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது
இந்த நிலையில், அமெரிக்காவில் கறந்த பாலில் இருந்து எச்5என்1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் அங்கு கடும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அத்துடன், கறந்த பாலை அருந்துவதைத் தவிர்க்குமாறும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாலில் இருக்கும் கொடிய கிருமிகளை சுத்திகரிப்பு மூலம் அழித்துவிடலாம், இது மிகவும் எளிதானதும் கூட. தற்போது பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸானது பறவைகள், விலங்குகள், மனிதர்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸானது மிக எளிதாக மனிதர்களுக்குப் பரவி அவர்களைக் கொல்கிறது.
இது தற்போது வௌவால்கள், பூனைகள், கரடி, நரி, பென்குயின்களுக்கும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் விலங்குகளின் பட்டியலில் மாடு சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.