
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் இன்று நள்ளிரவு ஆரம்பமாகவுள்ளது.
அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் இன்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆராதனையுடன் ஆரம்பமாகவுள்ளது.
உயிர்த்த ஞாயிறான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
இதனை நினைவு கூறும் வகையிலான குறித்த ஊர்வலமானது, கொச்சிக்கடை தேவாவலயத்தில் இருந்து மட்டக்குளி பாலம், வத்தளைச் சந்தி ஹெகித்த வீதியூடாகவும், அங்கிருந்து நீர்கொழும்பு, கொழும்பு பிரதான வீதியூடாக கட்டுவாப்பிட்டி தேவாலயம் நோக்கி பயணிக்கவுள்ளது.
மேலும், கொழும்பு மறை மாவட்டத்திலுள்ள சகல தேவாலயங்களிலும் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்றையதினம் நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.