நாட்டிலுள்ள முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்…! சபையில் சிறிதரன் எம்.பி

நாட்டிலுள்ள முன்னாள் போராளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான அரவிந்தன் எனும் நபர் கடந்த மாதம் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியான இவர் 08 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு சமூக இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் போராளிகளின் கல்வி உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி நிலைமைகளை தீர்க்கும் மனிதாபிமான செயற்பாடுகளை புலம்பெயர் நன்கொடையாளர்களின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுத்தும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவராக இருந்தும் பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இவர் மீது குற்றம் சுமத்தியுள்ள பொய்க் குற்றச்சாட்டில்  பயங்கரவாதத்தையோ அல்லது விடுதலைஃஃ புலிக ளையோ மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை நான் அறிவேன்.

மனிதாபிமானம் மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை வாக்குமூலம் பெறும் எனும் போர்வையில் கொழும்புக்கு அழைத்து அங்கு வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பது என்பது இந் நாட்டின் அதிஉச்ச எதேச்சி அதிகாரத்தையே மீளவும் காட்டியுள்ளது.

சமூக நல செயற்பாடுகளில் பகிரங்கமாக ஈடுபட்டுவரும் முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களது இயங்கு நிலையை முடக்கும் வகையிலும் திட்டமிட்டு  கைது செய்யப்பட்டுள்ள அரவிந்தனை உடனடியாக விடுதலை செய்வதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த நாட்டிலுள்ள முன்னாள் போராளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும்  பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews