இலங்கையை சேர்ந்த பெருமளவானோர் ரஷ்யாவில் கூலிப் படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ரஷ்யா உக்ரைன் யுத்தத்திற்காக இந்த நாட்டிலிருந்து பலர் அனுப்பப்பட்டுள்ளனர். இது ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயமல்ல. எனவே அவர்கள் இது தொடர்பில் பொறுப்பு கூறத்தேவையில்லை.
நேற்றுமுன்தினம் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றின் கவனத்திற்கு நான் இதனை கொண்டுவந்த நிலையில், இலங்கையில் உள்ள பலர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதாவது ரஷ்யாவுக்கு சென்ற தமது உறவுகளுக்கு 3,4 மாதங்களாக சம்பளமும் இல்லை, இவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்றும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரோடு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளேன்.
இவ்வாறு இலங்கையிலிருந்து சென்ற பெருந்தொகையானோர் முகாம்களில் வேலை செய்வதற்காகத்தான் அனுப்பப்பட்டார்கள்.
குறிப்பாக முகாம்களில் வேலை செய்யும் பணியாளர்களாகவே அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். எனினும் அவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்துள்ளனர்.
அதேவேளை சிலர் முகாம்களில் வேலை செய்வதாக எனக்கு அறியத்தந்துள்ளார்கள். சில பெண்கள் என்னுடன் தொடர்புகொண்டு கதைத்தார்கள். அவர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது என கூறினார்கள்.
இவ்வாறு முகாம்களில் வேலை செய்கின்றபோது 15 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை கொடுக்கின்றோம் நீங்கள் யுத்தத்திற்கு வாருங்கள், எமது யுத்த அணியினருடன் சேருங்கள் எனவும் அழைப்பு விடுக்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில் ஒரு தெரிவு குழுவை நியமித்து உடனடியாக ஆராயுங்கள்.
இது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துடன் கலந்துரையாடுங்கள்.
இது ரஷ்ய அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது அல்ல. உண்மையிலேயே இவர்கள் கூலிப்படைக்கே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.