இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவ படகோட்டிகள் மூவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகோட்டிகள் மூவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் நேற்றையதினம்(26) தள்ளுபடி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் கடற்பரப்பிற்குள் மாசி மாதம் 12 மற்றும் 22 ஆம் திகதிகளில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களில், படகோட்டிகள் என்ற அடிப்படையில் மூவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றினால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த மீனவர்கள், சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.
இந்நிலையில், மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டி.எவ்.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மூவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர் செய்து விடுவிக்குமாறு நீதிபதியினால் உத்தரவிடப்பட்டது.