கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலைக்கான ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் வைத்திசாலை அதிகாரிகளிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் குறித்த நன்கொடைக்கு நன்றி தெரிவித்த கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் குறிப்பிடுகையில்.
தற்பொழுது மாவட்டத்தில் கொவிட் அபாய நிலைமை தணிந்துள்ளது. ஆனாலும் இவ்வாறான உதவிகள் எமக்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது.
இவ்வாறான உதவிகளை வழங்கிய இராணுவத்தினருக்கு நாம் நன்றி சொல்கின்றோம். இதேவேளை இராணுவத்தினரிடம் மற்றுமொரு உதவியையும் எதிர்பாக்க்கின்றோம். எமது வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் குருதிக்கொடை வழங்குமாறு படையினரிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
அதேவேளை, எமது வைத்தியசாலைக்கான ஒக்சிசன் சிலின்டர்கள் 150 வரை தேவைப்படுகின்றது. தற்பொழுது 105 சிலின்டர்களே காணப்படுகின்றது. மேலதிகமாக தேவை உள்ள நிலையில் அதனையும் பெற்றுத்தருவதற்கு எதிர்பார்க் கின்றோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.