கற்பிட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…!

கற்பிட்டி – முகத்துவாரம் பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (30) கைப்பற்றப்பட்டுள்ளன.

எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையினரும், இராணுவத்தினரும் கூட்டாக சேர்ந்து குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன.

முகத்துவாரம் பிரதேசத்தில் சந்தேகத்திடமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட உரமூடைகளை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, 39 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 1229 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நோக்கில் குறித்த பீடி இலைகள், கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1229 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews