சுட்டெரிக்கும் வெயிலுக்கு வேலை செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு வேலை செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் டி.கடம்பன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பலியானார்கள். விதிமீறலாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகளைத் தகர்க்க வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிர்களைக் காவு வாங்கிய கல்குவாரி வெடி விபத்து குறித்து செய்தி சேகரிப்பதற்காக, கடந்த 2 நாட்களாக ஊடகவியலாளர்கள், அங்கே கதியாய்க் கிடந்தனர்.

ஆய்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்போதெல்லாம், அவர்களைப் பின்தொடர்ந்து தகவல்களைச் சேகரித்தனர். செடியோ, மரமோ இல்லாத பொட்டல் காடாக அந்தக் கல்குவாரி பகுதி இருந்ததால், ஒதுங்கக்கூட நிழலின்றி ஊடகவியலாளர்கள் தவித்தனர்.

மே 1ஆம் தேதி போலவே, 2ஆம் தேதியும் சதத்தை தாண்டி 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சுள்ளென்று வெயில் சுட்டெரித்தது. மற்ற செய்தியாளர்களுடன், அருப்புக்கோட்டை சன் நியூஸ் செய்தியாளர் ராஜா சங்கரும், வெயிலின் கடும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக தலையில் கைக்குட்டையைக் கட்டியவாறு, அங்கு நடப்பதை வீடியோ எடுத்தார். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வெயிலில் காய்ந்ததால் மிகவும் சோர்வு ஏற்பட, கைக்குட்டையை நனைத்து முகத்தைத் துடைத்தபடியே இருந்தார். அங்கு பணியை முடித்துவிட்டுக் கிளம்பியபோது மிகவும் துவண்டுபோய் இருந்தார்.

சக செய்தியாளர்களுடன் சாப்பிடக்கூட போகாமல், பேருந்தில் அருப்புக்கோட்டைக்கு விரைந்தார். அங்குள்ள அலுவலகத்துக்குச் சென்றவுடன் வாந்தி வர, அருகிலிருந்த மருந்தகத்தைத் தொடர்புகொண்டு, உதவிக்கு அழைத்திருக்கிறார். ‘இதற்கெல்லாம் நாங்க வரமுடியாது, டாக்டரிடம்தான் செல்லவேண்டும்’ என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். உடல்நிலை மோசமாக, அங்கேயே சுருண்டு விழுந்திருக்கிறார். ஆம்புலன்ஸ் வந்து அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்குத் தூக்கிச் சென்றது. அங்கிருந்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ராஜா சங்கர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

உடற்கூராய்வு முடிந்து உடலை ஸ்ட்ரெச்சரில் வெளியே எடுத்து வந்தபோது, “ராஜா.. எங்கள விட்டுட்டு போயிட்டியே!” என்று கதறி அழுதனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள தனது குடும்பத்தை, குறிப்பாக திருமணமாகாத சகோதரிகளைப் பராமரித்து வருவதற்காகவே, 42 வயதாகியும் தனக்கென்று மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ளாதவராக இருந்தார் ராஜா சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews