
இ#jaffnafishermen #jaffnafushermenissues #logalrillers
உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம் மகஜர்களை கையளித்தார்.






அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அன்பிற்கும் பாசத்திற்கும் இனிய எமது தமிழக மீனவ தொப்புக்கொடி உறவுகளே, மற்றும் வடமாகாண யாழ்ப்பாண மீனவ உறவுகளே. உங்கள் அன்பின் மாதகல் N.V.சுப்பிரமணியம் ஆகிய நான் வேண்டி நிற்பது,
இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இரண்டும் எமக்குள் செயற்கை முறையில் விரோதம், குரோதம் மற்றும் பிரிவை ஏற்படுத்தி எம்மை வைத்துப் பந்தாடுகின்றனர். இதை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் வேண்டும். எமது வயிற்றுப் பசியே பந்தாக மாறி இருக்கின்றது.
1) அழிவு என்று தெரிந்துகொண்டே நாம் கடல் வளத்தை முற்றாக அழிக்கின்றோம்.
2) எமக்குத் தேவையான மீன்களை எடுத்துக்கொண்டு மிஞ்சுகின்ற மீன் குஞ்சுகளை சாகடித்து மீன் பெருக்கத்தையும் குறைக்கின்றோம்.
3) சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை சூறையாடி சிறு மீனவர்களின் வயிற்றில் அடிக்கின்றோம்.
4) சிறு மீனவனுடைய கடல் உபகரணங்களை ஈவு இரக்கமில்லாமல் அறுத்து நாசம் செய்து அவர்களை பட்டினிச்சாவிற்கு அழைத்துச் செல்கின்றோம்.
இவை அனைத்தும் தெரிந்துகொண்டே சிறு மீனவனுக்கு செய்கின்ற கொடுமைகளாகும். இப்படிப்பட்ட கொடுமைகளை செய்வதுமல்லாமல் அனைத்தையும் அழித்தால் எதிர்காலத்தில்
1) எமது வயிற்றுப் பசியைப் போக்க இந்த கடலை மட்டுமே நம்பி வாழ்கின்ற நாம் எங்கு போவது.
2) நீங்கள் தான் எங்கு போவது?
3)வளங்களை அழித்துவிட்டு எமது வருங்கால சந்ததிக்கு எதைவிட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்?
எனவே விரோதங்களை விட்டு, குரோதங்களை விட்டு கொஞ்சம் உங்கள் மனதை கீழே இறக்கி சாந்தப்படுத்திக்கொண்டு சற்று எமது சந்ததிக்காக சிந்தியுங்கள். “விசைப்படகு கொண்டு வீரியமாய் தொழில் செய்தால் விளைவு அழிவைத்தவிர வேறொன்றுமில்லை.”
எனவே இந்த பேரழிவைத் தருகின்ற இழுவை மடித்தொழிலைவிட்டு விலகி மாற்று முறைத் தொழிலுக்கு வாருங்கள். மாற்றுமுறைத் (சட்டத்திற்குட்பட்ட) தொழிலை மேற்கொண்டால் இருநாட்டு தமிழ் மீனவனுடைய வாழ்வு சிறக்கும். வயிற்றுப் பசிபோகும். நாம் நினைத்தபடி எமது பின் சந்ததியையும் காப்பாற்ற முடியும். அத்தோடு தமிழக மற்றும் யாழ்ப்பாண மீனவர்களை மோதவைத்து வேடிக்கை பார்க்கின்ற நரித் தந்திரோபாய அரசுகளின் திட்டம் முறியடிக்கப்படும். எமது தொப்புள்கொடி உறவுகள் பலப்படும். உடன் பிறவா சகோதரர்களினுடைய அன்பு, பாசம் பெருக்கும். எம் அன்பிற்கினிய சகோதரர்களாக வாழ முடியும்.
எனவே
1) கடல் வளங்களை அழிக்கின்ற
2)வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற மீன் பெருக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கின்ற
3) தொழில் உபகரணங்களுக்கு நாசம் ஏற்படுத்தி அதனூடாக எமது அன்பிற்கும், பாசத்திற்கும் பேரிடியாக நிற்கின்ற இந்த இழுவைமடித் தொழிலை விட்டு விலகி மாற்று முறைத் தொழிலுக்கு வரும்படி எனது அன்பிற்கினிய தமிழக மற்றும் வடமாகாண தமிழ் மீனவ உறவுகளை அன்பாக வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.