
இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும் எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் ஆற்றிய நினைவுப்பேருரை…!
(தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்ட, தந்தை செல்வாவின் 47ஆம் ஆண்டு நினைவு நாளில் (26.04.2024), பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் ‘இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்’ எனும் தலைப்பில் நினைவு பேருரையை செய்திருந்தார்.)
தந்தை செல்வா என அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்
அறிமுகம்
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசியாவிலுள்ள ஈப்போ(Ipoh) நகரில் பிறந்தார். அவரது பிறப்பு மலேசியாவாக இருந்தாலும் வாழ்வும் கல்வியும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே வளர்ந்தது. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியான இந்துமதத்தை அதிகம் முதன்மைப்படுத்தும் கல்லூரியில் தொடங்கினார். இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாண சென்.ஜோண்ஸ் கல்லூரியிலும் பின் கல்கிசை சென் தோமஸ் கல்லூரியிலும் மேற்கொண்டார். 1918 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்திற்கு வெளிவாரி மாணவனாக கல்வியை மேற்கொண்டு விஞ்ஞானப் பட்டதாரியாக வெளியேறி கல்கிசை சென்.தோமஸ் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தனது குடும்ப விடயமாக விடுமுறை கோரியபோது மறுக்கப்பட்டதன் விளைவாக பதவியை இராஜினாமா செய்துவிட்டு கல்லூரியைவிட்டு வெளியேறினார்
பின்னாளில் எஸ்.ஜே.வி. சட்டம் பயின்று சிவில் சட்டத்துறையில் தனித்துவமான இடத்தை வகித்துவந்தார். செல்வாவின் அரசியல் ஈடுபாடு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூலம் 1947 ஆம் ஆண்டு சாத்தியமானது. அதனை அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட அரசியல் ரீதியான கொள்கை முரண்பாட்டினால் 1949 இல் சமஷ்டிக் கட்சி (Federal Party) எனும் தனியான கட்சியை ஆரம்பித்தார். அது பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சியாக உருவெடுத்தது. தமிழ் மக்களின் இனரீதியான பிணக்குக்கு சமஷ்டியே தீர்வென்ற அடிப்படையில் எஸ்.ஜே.வி. தமிழரசுக்கட்சியையும் அதன் கொள்கையையும் வரையறுத்துக் கொண்டார். அத்தகைய சமஷ்டியானது தெளிவான சுயாட்சியாக அமைய வேண்டும் என்ற இலக்கை தமிழ் மக்களிடமும் தென் இலங்கை ஆட்சியாளரிடமும் முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்தார். 1976 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் வரை தமிழரசுக்கட்சியும் தமிழ் மக்களும் அத்தகைய சமஷ்டிக் கோரிக்கைக்கு உட்பட்டு சுயாட்சியை அடைவதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வழிவகுத்திருந்தார். அவர் தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டாரே அன்றி மூலோபாயத்தை ஒருபோதும் மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. நடைமுறையில் தந்திரோபாயத்தை அவ்வப்போது மாற்றியுள்ளார். தென் இலங்கை அரசாங்கத்தோடு எதிராக போராடுவது, ஒத்துழைப்பது, உடன்படிக்கைகளை மேற்கொள்வது, இந்தியாவோடு கைகோர்ப்பது என பல்வேறு தந்திரோபாயங்களை எஸ்.ஜே.வி. தனது காலத்தில் மேற்கொண்டிருந்தார். ஆனால் ஒரு போதும் மூலோபாயத்தை கைவிடாது செயல்பட்டார். மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் புரிந்து கொள்ள முடியாத ஆய்வுகளும் அதனை பிரஸ்தாபிக்கும் அரசியல் தலைமைகளையும் சமகாலத்தில் அதிகமாக உள்ளன.
இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்
கே.ரீ.கணேசலிங்கம்
முன்னுரை
வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட நீண்ட அரசியல் பொருளாதார சமூக வரலாற்றை பிரதிபலிக்கும் தேசிய இனமான ஈழத்தமிழர் அகிம்சை ரீதியிலும் ஆயுத ரீதியிலும் போராட்டத்தை மேற்கொண்டவர்கள். அத்தகைய போராட்டத்தில் தலைவர்களும் மக்களும் அணிசேர்ந்ததோடு அதற்கான அர்பணிப்பையும் தியாகங்களையும் பாரியளவில் விடுதலைக்காக கொடுத்தவர்கள். ஆனால் அத்தகைய அனைத்துவகைப் போராட்டங்களால் விடுதலையை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ள முடியவில்லை. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 நூற்றாண்டின் முதல் காலப்பகுதிவரை இராமநாதன்-அருணாசலம் சகோதரர்கள் காலப் பகுதியாக அமைந்திருந்த போதும் எத்தகைய அடைவையும் தமிழர்கள் பெறமுடியவில்லை. தமிழர் மீதான அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் தொடர்ந்தது. இதனை அடுத்து பேரிபநாயகம்-கனகநாயகம் காலம் (1925-1931) பொன்னம்பலம்-செல்வநாயகம் காலம் (1930-1970) அமிர்தலிங்கம்- சிவசிதம்பரம் காலம்(1970-1983) ஆயுதப் போராட்ட அமைப்புக்களது காலம் (1983-2009) பின்னர் சம்பந்தன்-கஜேந்திரகுமார் காலம் (2009-2024) வரையும் ஈழத்தமிழர் விடுதலைக்கான போராட்டத்தை நிகழ்துகிறார்களே அன்றி அதில் விடுதலையை அடைய முடியவில்லை. இது 19 ஆம் நூற்றாண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டுவரையான இரு நூற்றாண்டுகால தோல்வியாக உள்ளது. இதனால் ஈழத்தமிழர் விடுதலை சாத்தியமானதா என்ற கேள்வி நியாயமானதாக எல்லோர் மத்தியிலும் எழுகிறது. இதனை தமிழர் தேசியத்தை முதன்மைப்படுத்தும் கட்சிகளிடமே எழுந்துள்ளது. தமிழ் புலமையாளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துடன் ஈழத்தமிழர் விடுதலை பற்றிய சந்தேகங்கள் அதீதமாகியுள்ளது. எல்லாச் சந்தேகங்களுக்கும் மத்தியில் தமிழர் மீதான அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும், பாரபட்சமும் தொடரும் அரசியலாகவே காணப்படுகிறது. ஒரு தேசிய இனமாக எழுச்சி பெற்று அகிழ்சை போராட்டங்களாலும் ஆயுதப் போராட்டத்தாலும் அடையாளப்படுத்தப்பட்ட தமிழர் வாழ்விடத்தை பறிகொடுத்து சமவாய்ப்புக்களை இழந்து இறைமையற்ற சுயநிர்ணயமில்லாத மக்கள் கூட்டமாக சிதைய முடியுமா? என்பதே பிரதானமான கேள்வியாகும். அதற்காகவா பல இலட்சக்கணக்கான தமிழர்களின் தியாகங்கள் நிகழ்த்தப்பட்டது. அதனை வேடிக்கைபார்க்கவா தேசியம் பேசிக் கொள்ளும் கட்சிகளும் அதன் தலைவர்களும் ஈழத்தமிழருக்கு வேண்டும்.
சுதந்திரம்-விடுதலை
சுதந்திரம் (Freedom) விடுதலை (Liberty) என்ற எண்ணக்கரு தொடர்பில் தெளிவான புரிதல் ஈழத்தமிழர் சமூகப் பரப்பில் இல்லாதுள்ளது. இரண்டையும் ஒன்றாக கருதும் வழக்கத்தை ஈழத்தமிழர் அறிவியல் காணப்படுகிறது. இரண்டுமே வேறுபட்ட அர்த்தங்களைக் கொண்டவை. சுதந்திரம் என்பது தன்னுணர்வுக்கும் அறிவிற்கும் மரபுக்கும் உட்பட்டு தனது எண்ணத்தை வெளிப்படுத்துவது. அதாவது பிற மனிதர்கள் முன் ஒரு மனிதன் தனது இருப்பை வெளிப்படுத்தல். பின்பற்றுதல். அச்சமின்றி, அடிமைத்தனமின்றி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே சுதந்திரம். விடுதலையானது அடக்குமுறையிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுபடுவதைக் குறிப்பது. சுதந்திரம் பற்றி ஹெரோல்ட் லஸ்கி குறிப்பிடும் போது, தங்களின் மிகச் சிறந்த சுயங்களாக தாங்கள் இருக்க வாய்ப்புக் கிடைக்கின்ற சூழலை பேராவலுடன் மனிதர்கள் பேணுவதை சுதந்திரம் என அர்த்தப்படுத்த முடியும் எனக்குறிப்பிடுகின்றார். அவர் மேலும் குறிப்பிடும் போது சுதந்திரம் ஒரு நேர்முகப்பொருள். அது கட்டுப்பாடு இன்மையை மட்டும் குறிப்பதல்ல. சேர்ந்து வாழ்தல் என்ற பண்பின் விளைவுதான் கட்டுப்பாடு என்கிறார்.
உள்நாட்டில் வாய்ப்புக்களும்-சவால்களும்
அறிவியலால் தேசியத்தை வடிவமைத்தல்
ஈழத்தமிழரின் அரசியலில் ஆழமான உரையாடல் களமாகவும் போராட்ட எண்ணமாகவும் தேசியம் கலந்துள்ளது. அதிலும் தமிழ் தேசியம் என்பது அறிவியலுடனும் அரசியலுடனும் பின்னிப்பிணைந்ததாக உள்ளது. அத்தகைய தேசியம் சமானியனது அரசியல், சமூக-பொருளாதார, பண்பாட்டு உணர்வுகளை மையப்படுத்தியதென்பது வியப்பான விடயமாகும். அதாவது சமானியனது அரசியல் பங்குபற்றலே தேசியம் என்று குறிப்பிட்டால் மிகையாகாது. அதனையே ஜனநாயகம் என்ற எண்ணக்கருவுக்குள்ளால் அடையாளப்படுத்த முயலுகின்றனர். தேசியம் என்பது முதல் அர்த்தத்தில் ஜனநாயகத்தைக் குறிப்பதாகும். மக்களின் திரட்சி மிக்க பங்கேற்பே தேசியமாகும். தேசியப் போராட்டங்கள் அனைத்துமே மக்களின் கைகளுக்கு அதிகாரம் மற்றும் இறைமை கைமாறுவதைக் குறிக்கும் போராட்டங்களாகும். தனிமனித உரிமையும் கூட்டுரிமையும் இணைந்ததென்றே தேசியமாகும். இவ்வகைத் தேசியம் எல்லா இடங்களிலும் சுயம் பற்றியே விவாதிக்கிறது. சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, சுயகௌரவம் என்பன இனம், நாடு தேசம் என்ற கூட்டுசுயம் வரை கட்டமைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் தேசியத்தின் தோற்றமானது 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனையாக இருந்தாலும் மனித குலம் அதனை பூகோளமயப்படுத்தியுள்ளது. அது சமானியர்களின் யுகமாகவே கட்டமைக்கப்பட்டது. முடியாட்சி முறைமைகளுக்கு எதிராக மக்களது திரட்சியே அத்தகைய தேசியத்தின் தோற்றமாகும். இன மத நிற சாதிய வேறுபாடுகளைக் கடந்து மக்களது திரட்சியே தேசியம் என்று சுருக்கமாக கூறிக்கொள்ளலாம். மக்கள் அரசியல் தீர்மானங்களில் பங்கெடுக்கும் ஜனநாயக ஈடுபாடு இல்லையாயின் அதனை தேசியம் எனக்குறிப்பிட முடியாது. மக்கள் தமக்குரிய விருப்புக்களை தீர்மானமாக எடுத்துக் கொள்வதே அவர்களது சுய உரிமையாகும். அதுவே சுயநிர்ணய உரிமையாகும். ஒரு சுயம் பிறருக்கு தீங்கில்லாத தன்னகத்தே சுயமாகச் செயல்படுவதும் சுயம் இன்னோர் சுயத்துடன் பரஸ்பரம் நலனடிப்படையில் ஒன்று சேருவதும் ஜனநாயகத்திற்கான அடிப்படைகளேயாகும். ஜனநாயம் என்பது உயிர்துடிப்புள்ள பண்பாட்டு அடையாளம். அது நாகரீகத்தின் முதிர்ச்சி.
ஈழத்தமிழர் மன்னராட்சிக்குள் இருந்து விடுபட வழிவகுத்த பிரித்தானிய ஆதிக்கவாதம் தனது நிர்வாக நலனுக்காக ஒன்றையாட்சி மரபுக்குள் ஒன்றிணைத்தது. இலங்கைத்தீவின் பிரிதானிய அரசியலமைப்பால் கட்டப்பட்ட ஒன்றையாட்சி நியமத்திற்குள் ஈழத்தமிழர்கள் வலிந்து பிணைக்கப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது வாழ்விடமும் மொழியும் பண்பாட்டு அடையாளங்களும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதனை சுதந்திர இலங்கைக்குள் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்குள்ளேயே தந்தை செல்வா சமஷஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். அதுமட்டுமன்றி தந்தை செல்வாவுக்கு முன்பே ஆறுமுகநாவலரும் சேர் பொன் இராமநாதன் மற்றும் சேர். பொன். அருணாசலம் போன்றவர்கள் அதற்கான ஆரம்பப் புள்ளியை ஏற்படுத்திவிட்டார்கள். அதிலும் நாவலரும் அருணாச்சலமும் தமிழ்த்தேசிய அங்கீகாரத்திற்கான மொழி மத அடையாளங்களுடன் பண்பாட்டச் சேர்க்கையை முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்தினார்கள். இவர்களது பங்களிப்பிலிருந்து மேலும் முன்னேறிய தந்தை செல்வநாயகம் அவர்கள் இரண்டு பிரதான விடயங்களை முன்மொழிந்தார். ஒன்று சமஷ்டிக் கோரிக்கை. சமஷ்டிக் கோரிக்கை என்பது வெளித் தேற்றத்தில் தமிழ் தேச அங்கீகாரம் போன்று அமைந்திருந்தாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தம் சுயநிர்ணயத்தை கொண்டது. அமெரிக்காவின் அனுபவத்தை வைத்துக் கொண்டு நோக்கும் போது பிரிந்து செல்லவிடாது அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு பல தேசங்கள் ஒன்றிணைந்து இயங்குவதென்று குறிப்பிட்டாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக உலகம் முன்வைத்த ஒருவிடயமாக சமஷ்டி கருதப்படுகிறது. லெனின் தலைமையிலான சோவியத் ரஷ்சியாவின் சமஷ்டியானது அத்தகைய அர்த்தத்திலேயே இயங்கியது. அதாவது சுயநிர்ணயம் என்பது ஒரு தேசிய இனமானது தனக்கென சுயாதிபத்தியமுள்ள ஒர் அரசை அமைப்பது. அல்லது ஒர் அரசமைப்பிலிருந்து பிரிந்து தனியரசை அமைப்பது அல்லது அவ்வாறு பிரிந்து இன்னோர் அரசுடன் இணைந்து கொள்வது அல்லது தனியரசாக இருக்கும் ஒரரசு இன்னோரசுடன் இணைவது எனக்கொள்ளப்படுகிறது. இன்னோர் அர்த்தத்தில் சுயநிர்ணயமானது ஓர் அரசின் இறைமை இன்னோர் அரசினால் மீறப்படாது அல்லது தலையிடாது இருத்தலாகும். அந்த வகைக்குள் பார்த்தால் சமஷ்டி சுயநிர்ணயத்தின் பால்பட்டதென்பது தெளிவாகிறது.
இன்னொன்று தமிழருக்கான தேசிய இன அடையாளம். ஈழத்தமிழர்களைவ டக்கு கிழக்கு நிலத்துடன் பாரம்பரியமாக வாழும் தேசிய இனமாக நிலைநிறுத்தியதில் தந்தை செல்வாவுக்கு தனித்துவமான பங்குண்டு. அவர் மீது எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதற்குரிய மொழி, பண்பாடு, பொருளாதாரம் வரலாறு என்பன வடக்கு கிழக்கு நிலம்சார்ந்து உண்டு என்பதை நிலைப்படுத்தியவர் செல்வநாயகம் என்பது முக்கியமானது. அவரது முன்னகர்வே பின்வந்த அனைத்து அரசியல் போராட்டங்களுக்கும் இருப்புக்கும் அடிப்படையானது.
அறிவியல் வலிமையை நோக்கி ஈழத்தமிழர் புலத்திலும் புலம்பெயர் வாழும் நாடுகள் முழுவதிலும் இயங்குகின்றனர். அதனால் அவர்களை தேசியத்தின் இருப்புக்குள் சிந்திக்க வைப்பது கடினமானதல்ல. அதற்கான அடிப்படையை கடந்தகால வரலாறு தந்துள்ளது. அதிலுள்ள போலிகளை அகற்றுவதே தற்போதைய தேவையாக உள்ளது. ஈழத்தமிழரிடம் தெளிவான மூலோபாயம் காலத்திற்கு அமைவாக வகுக்கப்பட்டாலும் அதனையும் கோட்பாட்டடிப்படைக்குள் மட்டுமே உட்படுத்தியவர்களாக உள்ளனர்.. மாறாக நடைமுறைசார் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக உள்ளனர். அது மட்டுமல்ல தந்திரோபாய ரீதியில் செயல்படத் தவறுபவர்களாக விளங்ககின்றனர்.கட்சிகளும் கட்சிகளின் அரசியலும் அத்தகைய வறுமைக்குள் இயங்குகின்றதை கடந்த வரலாறு முழுவதும் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. கற்பனைக்கும் மாஜாயால ரம்மியங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கற்பனையில் வானம் ஏறி வைகுண்டம் செல்பவர்கள். ஒரு போதும் நடைமுறை யதார்த்தம் பற்றி சிந்திக்காதவர்கள். மூலோபாயத்தை யதார்த்தத்திற்கு ஏற்ப வளைப்பது தான் அரசியல். அதுவே தந்திரோபாயம்.
காலம்பற்றிய உணர்வு (Time Consciousness), அர்ப்பணிப்பு (Dedication) விடா முயற்சி (Persevering), நீண்டகாலப் பார்வை (Long term Prospective) கொண்டிருந்த ஆசியப் பண்பாட்டு மரபில் மூத்த குடிமக்கள் தமிழர்கள். ஆனால் தற்போது அது எதனையும் கைக்கொள்ளாத இனமாக கற்பனையில் தேசியத்தையும் தேசியவாதத்தையும் விடுதலையையும் கருதுகிற துயரத்தைக் கொண்டவர்கள். இத்தகைய ஆசியப் பண்பாட்டினால் உருவாகி வளர்ச்சியடைந்துள்ள இரு தேசியங்களாக ஜப்பானியரும், யூதர்களும் எம்முன்னே முன் உதாரணமாக உள்ளனர். இந்த இரு இனங்களும் ஐரோப்பிய மரபுக்குள் குடியேறிகளாக மாற்றமடைந்து ஐரோப்பியரது வாழ்வு அனுபவங்களையும் அறிவியல் வளர்ச்சிக்கும் பொருத்தமாக தம்மை தகவமைத்துக் கொண்டு எழுச்சியடைந்தனர். இந்த வளர்ச்சியிலிருந்தே தமது தேசங்களை நேசித்ததுடன் விடுதலை நோக்கி நகர்ந்து உலகிலேயே வலுவான இறைமை பொருந்திய தேசியங்களாக அரசுகளை கட்டமைத்தார்கள். தமது கலாசார பெருமையை உணர்ந்திருந்த ஜப்பானியரும் யூதர்களும் நவீன அறிவியலில் காணப்பட்ட வெற்றிடத்தை கண்டறிந்து அதனை நிரப்பீடு செய்ததன் மூலம் தமது வளர்ச்சியை தமதாக்கினர். ஐரோப்பிய கல்வியை ஈழத்தமிழர் பெற்றிருந்தாலும் அவற்றை தொழில்வாய்ப்புக்கும் அடிமைத்தனத்திற்கும் உட்பட்டதாக பெற்றார்களே அன்றி அதனை தமது தேசிய அறிவியலாகவோ, சமூக அறிவியலாகவோ கொள்ளவில்லை. அதனை அரசியல்சார் அறிவியலாகக் கொள்ளவில்லை. அதனை யதார்த்தபூர்வமான உள்நாட்டு-வெளிநாட்டு அரசியலுக்கு பொருத்தமான வகையில் தமிழ் தேசியக் கட்டமைப்புக்கு அமைவாக அதனை வடிவமைக்கவில்லை. பூகோள, புவிசார் அரசியலை எதிர் கொள்ளக் கூடிய அறிவியல்சார் அணுகுமுறையை ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கவில்லை. தமிழ் தேசியத்தை தாங்கிப் பிடிக்கக்கூடிய உயிர்த்துடிப்புள்ள மரபுகளின் இருப்பு என்றுமே ஈழத்தமிழரிடம் பலமானதாக உள்ளது. ஆனால் தமிழரின் நவீன அரசியல் அறிவியல் அணுகுமுறையில் மிகவும் அடிமைநிலையிலேயே உள்ளனர். காப்பிய நாயக கற்பனைகளும் நடைமுறைக்கு பொருந்தாத தூய்மைவாதங்களும் கற்பனாவாதங்களும் வரண்ட இலட்சியவாதங்களும் ஈழத்தமிழர் முன் துயரமான வரலாறாக உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். ஈழத்தமிழரின் அரசியலின் உயிர் மூச்சான புவிசார், பூகோளம்சார் அரசியல் அணுகுமுறை அறிவியலுக்குள்ளால் நோக்கப்பட வேண்டும்.
தேசியமாக-தாயகமாக ஒன்றிணைதல்
ஈழத்தமிழர் ஒரு தேசியமாக ஒன்றிணைதல் என்பது வாய்ப்பான சூழலாகவே உள்ளது. காரணம் தொடர்ச்சியான நிலத்தை தென் இலங்கை ஆட்சியாளர்களின் திட்டமிட்ட குடியேற்றங்களால் தடுக்க முயன்ற போதும் ஒரே தொடர்ச்சியான நிலமாக கட்டமைக்கும் மனோநிலை இன்னுமே ஈழத்தமிழரிடம் காணப்படுகிறது. மொழியும், பண்பாடும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. அது நீண்ட வரலாற்று துயரை சுமந்துள்ளது. அது வளர்ச்சியையும் அடைந்துள்ளது. அதனால் ஈழத்தமிழர் தேசியமாக ஒன்றிணைவது கடினமானதல்ல. இதற்கு வலுவான காரணியாக தேசியம் என்னுமே ஈழத்தமிழ் சமானியனிடம் இருப்பதேயாகும். அகிழ்சைப் போராட்டத்தின் போதும் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்த போதும் சமானியன் துயரங்களோடும் வலிகளோடும் பின்தொடந்த வரலாற்றை நினைவு கொள்ள வேண்டும். இரு எழுக தமிழ் போராட்டமும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திலும் சமானியன் அனைத்து எதிர்ப்புவாதங்கள் முன்னும் நிமிர்ந்து நின்ற போக்கினை நிராகரித்துவிட முடியாது. சாந்தன் என்ற ஒற்றை மரணத்தின் வலியிலும் ஈழத்தமிழ் சமானியன் அணிதிரண்டதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். எனவே ஈழத்தமிழரை தேசியமாக அணிதிரட்டுவது கடினமான விடயமாகாது. காரணம் தேசியத்திற்குள் ஈழத்தமிழனது வரலாறும் பண்பாடும் குவிந்துள்ளது. இது பற்றி ரோசா லக்சம்போர்க் குறிப்பிடும் போது, தேசிய அரசு மற்றும் தேசியம் என்பன வெற்றுக் கூடு மட்டும்தான். அதற்குள் அனைத்து வரலாற்று சகாப்த்தங்களும் வர்க்க உறவுகளும் தமது சிறப்பான உள்ளீடுகளை நிரப்புகின்றன என்கிறார்.
தேசம் ஒரு கூட்டு ஆத்மா என எர்னஸ்ட் ரெனான் கூறுகின்றார். தேசியமே அந்த கூட்டு ஆத்மாவின் உயிர் மூச்சாகும். இதனை மேலும் புரியவைக்கும் விதத்தில் வியாட்டார் ஒரு தனியான அரசியலில் அரசாக ஒழுங்கமைக்கப்படாத வரை அந்த மக்கள் ஒரு தேசமாக மாட்டார்கள் என்கிறார். ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பு, குறைந்தபட்ச நிலப்பரப்பு, ஒருங்கிணைந்த நிலப்பரப்பு தேசம் என்ற உணர்வு நிலையை மக்களுக்கு(தேசியம்) ஏற்படுத்தும் என அவர் விபரிக்கின்றார். தேசியம் என்ற சொல் மூன்று வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கிறது.
தேசியம் பொருளல்ல. அருவமான பொருளும் கூட அல்ல. ஆனால் அது ஒரு நிகழ்வுப் போக்கு. ஒரு துணைக் கருவி. மினோக் என்ற அறிஞர் தேசியத்தை அரசியல் மயப்பட்ட நடவடிக்கை என்கிறார். குடிமக்கள் தேசத்திற்காக போராடுவதை விட தேசியம் மூலம் போராடுகிறார்கள். இவை அனைத்தும் ஈழத்தமிழரிடம் உள்ளது. அதனை வளர்த்தெடுப்பதன் மூலம் விடுதலையை அடைய முடியும். அதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
தேசியம் போன்று தாயகத்தையும் ஒன்றிணைக்க வேண்டிய நிலை தமிழர் அரசியலுக்கு உண்டு. வடக்கு கிழக்காக தாயகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அத்தகைய ஒன்றிணைவு அரசியலாக மட்டுமல்லாது பொருளாதாரமாக சமூகமாக வாழ்வியல் ஒழுக்கமாக கட்டமைக்கப்பட வேண்டும். அதிக பிரித்தாளுகைக் கோட்பாடுகளாலும் சதிக்கோட்பாட்டாலும் அரசியல் கட்சிகளின் அபிலாசைகளாலும் பிரிந்திருக்கின்ற வடக்கு-கிழக்கு ஒன்றிணைக்கப்பட வேண்டும். இலங்கை ஆட்சி அதிகாரம் சட்டரீதியாக வடக்கு கிழக்கை பிரித்து வைத்திருக்கலாம். ஆனால் உளரீதியாக மக்களது உணர்வுகள் அடிப்படையில் ஒன்றிணைத்தல் என்பதற்கு தடைகள் எதுவும் கிடையாது. அது மட்டுமல்லாது மொழி, பண்பாட்டு அடையாளம் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் இரு பிரதேசத்திற்கும் ஒரேமாதிரியானவை என்பதை நிராகரிக்க முடியாது. தனிமனிதனது அரசியல் அபிலாசைகளே முரண்பாடுகளுக்கு அதிக காரணமாக அமைந்துள்ளது. அத்தகைய முரண்பாட்டை களைவது கடினமானதாக தெரியவில்லை. அதற்காக புதிய அரசியல் சக்தியாக புலம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கை அரசியல் பொருளாதாரமாக கட்டமைத்தல்
வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதோடு முஸ்லீங்களுக்கு உரித்துடையதென 1960 களில் தமிழரசுக் கட்சி திருமலைத் தீர்மானத்தில் தெரிவித்திருந்தது. முஸ்லீம்களுக்கு தனியான சுயாட்சிப் பிரதேசம் வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1968 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தந்தை செல்வா அழைப்பு விடுத்த போது அதில் முஸ்லீம்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். ஆயுதப் போராட்டத்திலும் அத்தகைய பங்களிப்பு காணப்பட்டது. ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் பிரதான பங்குவகித்தனர். அண்மையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பாரியவிலான முஸ்லீம்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் போராட்டம் நகரும் போது கலந்து கொண்டதை மறுக்க முடியாது. கிழக்கிலுள்ள முஸ்லீம்களின் பொருளாதாரம் தமிழர்களின் கொள்வனவுத் திறனிலேயே தங்கியுள்ளது. அவ்வாறே முஸ்லீம்களின் வர்த்தகத்திலேயே தமிழர்கள் தங்கியுள்ளனர்.
ஆனால் இவற்றை எல்லாம் நிராகரிக்கும் வகையில் இரு இனங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன. அது திட்டமிட்ட பிரித்தாளுகையினாலும் சதிக்கோட்பாடுகளாலும் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இத்தகைய பகைமை இரு பிரிவினரையும் பலவீனப்படுத்துவதுடன் காணாமல் போவதற்கான வாய்ப்பினை அதிகரிக்க உதவும். இரு சமூகங்களும் சேர்ந்து வடக்கு கிழக்குத் தளுவிய தளத்தில் அரசியல் பொருளாதரத்தை கட்டியெழுப்ப வேண்டும். குறைந்த பட்சம் தமிழர்களாவது முதலில் வடக்கு கிழக்கு தளுவிய விதத்தில் அரசியல் பொருளாதார நிறுவனங்களை உருவாக்கி இரு மாகாணங்களுக்குமான பிணைப்பினைப் பலப்படத்த வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் தற்போது பெருகிவருகின்றன. புவிசார் பொருளாதாரம் (Geo-Economy) என்பது நாடுகளுக்கு மட்டும் உரியதல்ல. பிராந்தியங்களுக்கும் பிரதேசங்களுக்கும் உரியதாகும். அதனை நோக்கி ஈழத்தமிழர்கள் செயல்பட வேண்டும். வடக்குக்கும் கொழும்புக்குமான பொருளாதார உறவை விட வடக்குக்கும் கிழக்குக்குமான பொருளாதார பாலம் தோற்றுவிக்கப்பட வேண்டும். பொருளாதாரமும் வர்தத்தகமுமே புதிய தேசியவாதத்தின் ஊற்றாகும். தராளவாதத்தின் புதியவரவான நவ-தராளவாதம் எழுச்சியடைந்த போதே புதிய தேசியவாதம் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அது மேலாதிக்க தேசியவாதமாகவும், (இதனை நவ-தேசியவாதம் என்றும் அழைப்பதுண்டு) தற்காப்புத் தேசியவாதமாகவும் பரிமாணம் பெற்றுள்ளது. ஈழத்தமிழர் தற்காப்புத் தேசியவாதத்தை நோக்கி நகர வேண்டும்.
கட்சி அரசியலை மீளமைத்தல்
கட்சியின் தலைமைத்துவத்திலேயே நாடும் தேசியமும் தங்கியுள்ளது என்பதை அமெரிக்க இராஜதந்திரி கென்றி கீசிங்கர் அரசியல் தலைமைத்துவம் என்ற வரைபுக்குள்ளால் விபரிக்கின்றார். சார்ஸ் டி கோல் பிரான்சை வெற்றிகரமாக நட்பில் வழி நடத்திய வரலாற்று மகத்துவத்தை காட்டியவர். பனிபோரின போது ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்காவிற்கு சமநிலை மூலோபாயம் மூலம் புவிசார் மூலோபாய நன்மைகளை வழங்கினார். 25 ஆண்டு கால மோதலுக்கு பிறகு எகிப்தின் தலைவர் அன்வர் சதாத் மத்திய கிழக்கிற்கு அமைதிக்கான ஒரு பார்வையை அதிகமான உத்திகள் மூலம் கொண்டுவர முயன்றார். முரண்பாடுகளுக்கு எதிராக லீ குவான் யூ சிறப்பு மூலோபாயம் மூலம் ஒரு சக்தி வாய்ந்த நகரமயமாக்கமாக சிங்கப்பூரை உருவாக்கினார். மாக்ரெட் தச்சர் ஆட்சிக்கு வந்த போது பிரிட்டன் ஐரோப்பாவின் நோய்வாய்ப்பட்ட மனிதர் என விமர்சிக்கப்பட்டதை நம்பிக்கையின் அடிப்படையில் செயற்பட்டு நாட்டின் உறுதியையும் சர்வதேச நிலையையும் புதுப்பித்தார். இந்த தலைமைகளின் ஊடாக வரலாற்று கருத்தையும், பொது அனுபவத்தையும் அதிலிருந்து பெற்றுக் கொண்ட பாடங்களையும் கொண்டு நுண்ணறிவினால் தனது தலைமைத்துவ பண்பைத் தாமே செழுமைப்படுத்தியதாக காட்டுகின்றார். உலக ஒழுங்கு மற்றும் இன்றைய தலைமையின் இன்றியமையாத தன்மை பற்றிய அவரது பிரதிபலிப்புகளுடன் அரசியல் தலைமைத்துவங்கள் அடையாளம் காணப்படுகின்றன. ஆகவே உலகில் காணப்பட்ட இவ்வாறான தலைமைத்துவங்கள் மூலம் தமது தேசத்தை செதுக்கி கொண்டு செயற்பட்டார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
தேசத்தின் கட்டுமானம் அரசியலிலும், அரசியலின் இருப்பு கட்சிகளின் கட்டமைப்பிலும் இயல்பான ஜனநாயக பிரயோகத்தில் தங்கியுள்ளன. உலகளாவிய ரீதியில் கட்சிகள் அல்லது தேசிய இயக்கங்கள் தேசங்களை நிர்மாணிக்கின்றன. அத்தகைய பொறுப்புடமை கொண்டதாக கட்சிகளும் கட்சிகளின் அரசியலும் அரசியல் தலைமைகளும் காணப்படுகின்றன. நவீன அரசியல் யுகத்தை வடிவமைப்பதில் கட்சிகளுக்கு தனித்துவமான பங்கு உள்ளது. 1949-2009 வரை தமிழரசுக் கட்சி பல ஏற்ற இறக்கங்களை எதிர் கொண்டது. 2009 பின்னர் ஈழத்தமிழருக்கு பாரிய வாய்ப்பக்கள் கிடைத்த போதும் தனிப்பட்ட நலனினாலும் கட்சிக்குள் நிலவிய அக மோதல்களாலும் ஈழத்தமிழருக்கான வாய்ப்புக்களை தமிரசுக்கட்சி தலைமைதாங்கிய காலத்தில் தவறவிட்ட வரலாற்றை மறுக்கவியாது. தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சியின் தேவைப்பாடு அவசியமானதாக உணரப்படும் காலம் ஒன்றுக்குள் தமிழ் மக்கள் உள்ளனர் என்பது ஒரு புறம் அமைய மறுபக்கத்தில் வடக்கு கிழக்கு முகமுடைய கட்சியாகவும் அதிகம் தமிழர் அரசியலை கட்டமைக்க முயன்ற கட்சியாகவும் தமிழரசுக் கட்சி உள்ளது. குடும்ப செல்வாக்கை அதிகம் கொண்டிராத தமிழ் தேசியக் கட்சியாகவும் உள்ளதனால் அதன் மீதான கரிசனை அவசியமானது. தமிழரசுக் கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவர்கள் பொதுமக்களோ தமிழரசுக் கட்சியின் போட்டிக் கட்சிகளோ அல்லது விரோத கட்சிகளோ கிடையாது. கட்சிக்குள் இருந்த சுயநலப்போட்டியே கட்சியின் புதிய தலைமையையும் நிர்வாகத்தையும் இயங்க முடியாதுள்ள நிலையை உருவாக்கியுள்ளது. இது மூத்த தலைவர்களின் பொறுப்பற்ற செயல் என்ற விமர்சனமும் உண்டு. தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கே உரியதென்ற மமதையே தற்போதைய அனைத்துச் சூழலுக்கும் காரணமாகும்.
தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கானது. தமிழ் மக்களின் நலனை நோக்கியது. தனிப்பட்ட நபர்களின் நலனுக்;குரியதல்ல. கட்சிக்குள் திறமையானவர்களை உள்வாங்குதல். இளைஞர்களையும் பெண்களையும் கட்சிக் கட்டமைப்புக்குள் கொண்டுவருதல். கட்சிக் கிளைகளை பிரதேசங்கள் தோறும் அமைத்தல். மக்களின் துயரங்களில் பங்கெடுத்தல். வறுமைக்குள் வாழும் மக்களின் இருப்பினைப் பாதுகாத்தல். போரினால் பாதிக்கப்பட்ட போராளிகளையும் விதவைகளையும் பாதுகாக்கும் திட்டங்களை உருவாக்குதல். இவை எல்லாவற்றையும் கட்சி மேற்கொள்வதன் மூலமே விடுதலையை நோக்கி நகர முடியும். இது தமிழரசுக் கட்சிக்கு வெளியேயுள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் பொருந்தும். தவறும் பட்சத்தில் விடுதலை பற்றியும் தேசியம் பற்றியும் உரையாடுவது தமிழ் தேசியக் கட்சிகளுக்கு பொருத்தமானதாக அமையாத நிலை ஏற்படும். தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அவலநிலையை தவிர்க்க வேண்டும். மேற்குறித்தவற்றை தமிழரசுக் கட்சி மேற்கொள்ளல் அவசியமானது. அதன் மூலமே தமிழரசுக் கட்சியும் மக்களும் மீட்டெழ முடியும்.
பிராந்தியத்திய சர்வதேச மட்டத்திலுள்ள வாய்ப்புக்களும் சவால்களும்
அரசியல் என்பது காணப்படும் வாய்ப்புக்களை கையாள்வது பற்றிய வித்தை என்பார்கள். அத்தகைய அரசியலே ஈழத்தமிழரது சமகால தேவையாகும். 1991 ஆண்டு சிறிபெரும்புதாரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் இந்திய-ஈழததமிழர் உறவு பலவீனமானதாகவே உள்ளது. அத்தகைய படுகொலை ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான வாய்ப்புக்களை தகர்த்தொறிந்தது என்றே கூற வேண்டிய நிலை உள்ளது. காரணம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பலத்தின் ஒரு பக்கம் இந்திய அரசியலிலே அதிகம் தங்கியிருந்தது. அதற்கு இந்திய-இலங்கை புவிசார் அரசியல் அடிப்படையானதாக உள்ளது. இங்கு புவிசார் அரசியல் (Geo-Politics) எனப்படுவது இந்திய உபகண்டம் சார்ந்த அரசியலாகும். பூகோள அரசியல் (Global Politics) எனப்படுவது பரந்த பூகோளம் தழுவிய நலன்களைக் கொண்ட ஆதிக்க வல்லரசுகளின் அரசியலாகும். புவிசார் அரசியல் அர்த்தத்தின்படி பார்க்கையில் இந்தியாவிற்கு அண்மையில் அதனுடன் ஒன்றித்த அமைவிடத்தை இலங்கைத் தீவு கொண்டுள்ளதனால் இந்தியாவின் அரசியலோடு நேரடியாக தொடர்புற்று பின்னிப் பிணைந்துள்ளது. அவ்வாறே இந்தியாவின் பாதுகாப்போடு தொடர்புள்ள கேந்திர மையத்தில் இலங்கை அமைந்துள்ளது. அது மட்டுமன்றி இந்து சமுத்திரத்தில் இராணுவ கேந்திர முக்கியத்தும் வாய்ந்ததும், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததுமான நிலையத்தில் இலங்கை அமைந்துள்ளது. இதனால் இத்தகைய நலன்களோடு சம்பந்தப்பட்ட பூகோள வல்லரசுகளின் அரசியலுடன் இலங்கைத் தீவு தொடர்புறுவதாக உள்ளது. இந்நிலையில் இலங்கையின் மீது இந்தியாவிற்கு அதிகபட்ச தேவை இருக்கும். அதேவேளை பூகோள நலன்களுக்கான ஆதிக்க சக்திகளும், இந்தியாவிற்கு எதிரான அரசியற் சக்திகளும் இலங்கையின் மீது பெரும் ஈடுபாடு இருக்கும். இதனைக் கணித்து செயல்படுவதென்பது அறிவினாலும் அரசியல் தந்திரம் மிக்க தலைமைகளாலும் முடியும். நடைமுறைசார் மற்றும் முறைமைசார் அரசியல் இராஜதந்திர கட்டமைப்புக்கள் தமிழ்த் தரப்பிடம் இல்லை என்பது பிரதான சவாலாக உள்ளது. இதற்கான புலமைசார் பாரம்பரியமும் தமிழ்த் தரப்பிடம் கட்டிவளர்க்கப்பட வேண்டும். இத்தகைய வெற்றிடத்தில் இருந்து மேற்படி கட்டமைப்புச் சார்ந்த வளர்ச்சிகளைக் கொண்டிருக்கும் பிறதரப்புக்களுக்கு நிகராக தமிழ்த் தரப்பு தன்னை நிலைநிறுத்த அரும்பாடுபட வேண்டும். இது வெறுமனே அறிவு சார்ந்த விடயம் மட்டுமல்ல அறிவுக்கும் அப்பால் புலமையும் கையாளல் தேர்ச்சியும் அதற்குப் பொருத்தமான மனப்பாங்கும் ஒருங்குசேர வளரவேண்டும். புவிசார் அரசியல் – பூகோள அரசியல், அரசியல் – இராஜதந்திரம் போன்ற துறைகளில் புலமையும், இவற்றைக் கையாளும் திறமையும் சேர்ந்து வளர்ச்சி அடைந்திருக்கக் கூடிய ஒரு மக்கள் கூட்டத்தினாற்தான் வரலாற்றில் வெற்றிகளைக் நோக்கி நகர முடியும்.
ஈழத்தமிழர்கள் தமிழகத்தை திறவுகோலாக கொள்ளுதல் வேண்டும். எட்டுக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகம் எழுச்சி பெறும் போது புதுடில்லியையும் உலகத்தையும் செல்வாக்குச் செலுத்த முடியும். தமிழ் மக்களுக்கு தமிழகம்-புதுடில்லி-உலகம் என்ற வரைபடமே வாய்ப்புக்களுக்கான திறவுகோலாகும். இதனால் தமிழக-ஈழத்தமிழர் உறவு பலமானதாக கட்டமைக்க வேண்டும். அவ்வாறே இந்தியாவுடன் வெளியுறவுப் பாரம்பரியத்தை கட்டமைத்தல் வேண்டும். தெளிவாக இந்தியாவை நோக்கி நட்புறவை உருவாக்க வேண்டும். ஆயுதப் போராட்ட காலத்தில் முறிந்து போன உறவு மீளவும் மிதவாத அணுகுமுறையால் கட்டமைக்க முடியும். அவ்வாறே இந்துசமுத்திரத்தை நோக்கி நகரும் சக்திகளை கையாளுதல் வேண்டும். அமெரிக்கா சீனா போன்ற தரப்புக்கள் மட்டுமல்லாது குவாட் அமைப்பிலுள்ள நாடுகளை ஈழத்தமிழர் நட்புக் கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். உலகளாவிய அரசுகளுடன் நட்புறவை பலப்படுத்தல், சர்வதேச சட்டங்களுக்கு இயைபாதல் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மற்றும் ஜெனீவா அரங்ககுகளை பிரயோகப்படுத்தல் வேண்டும். தமிழர் தரப்பு கூட்டாகவும் திட்டமிடலுடனும் கட்டமைப்புக்களை உருவாக்கி நகருதல் வேண்டும். இவற்றின் மத்தியில் பாரிய சவால்கள் காணப்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்ள கட்சியாக தமிழ் மக்களின் புலமைத்தளமும் கூட்டாக செயல்பட வேண்டும். அறிவியல் இல்லாத அரசியல் தோற்றுப் போகும்.
முடிவுரை
ஈழத்தமிழர்கள் இப்போது தமக்கான உரிமையைப் பெறுவதற்கு தம்மை சரிவர தகவமைத்துக் கொள்ளவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளனர். வச்சிரம் போன்ற முதுகெலும்பைக் கொண்ட தலைவர்களையும், மூளைப்பலம் கொண்ட அறிஞர்களின் வருகைக்காகவும் தமிழ் மக்களின் வரலாறு செஙக்ம்பளம் விரித்து காத்துக்கிடக்கிறது. விலைபோகாத, கண்ணியமுள்ள செயல்திறன் கொண்ட நீண்டதூர பார்வை மிக்க சிறந்த தலைவர்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்றவல்ல எவனோ அவனே வரலாற்று தனது மக்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும்.