முல்லைத்தீவு மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக, தீப்பற்றி எரிந்து தீ காயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது கணவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்து சம்பவம், கடந்த முதலாம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே, இவ்வாறு தீப்பற்றி எரிந்து, தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக, யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த 5 ஆம் திகதி, கணவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கணவனின் தாயார் கருத்து வெளியிடுகையில், குடும்ப தகராறு காரணமாக, பெண், தனக்கு தானே தீ பற்ற வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிந்த பெண்ணின் தயார், தனது பிள்ளையை எரித்த கணவனின் செயற்பாடு, கணவனின் வன்முறை எனவும், இதற்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இருப்பினும், தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணின் இரண்டரை வயது குழந்தை, தந்தையின் தாயாரின் அரவணைப்பிலேயே தற்போதும் இருந்து வருகின்றது