முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டும் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்து சமூக சேவகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஐவருக்கு இவ்வாறு கல்முனை நீதிமன்ற நீதிபதியின் கையொப்பத்துடன்,
பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவினால் குறித்த நபர்களுக்கு தடையுத்தரவு பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன், தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விநாயகம் விமலநாதன் ஆகிய ஐவருக்கே இவ்வாறு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
மேலும், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரிய நீலாவணை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.