
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(18) தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்றையதினம் காலை 10.31 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
முதலில் அகவணக்க நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து சர்வமத தலைவர்களின் முன்னிலையில் ஈகைச் சுடரேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தியவாறு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி வழங்கியிருந்தனர்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உணர்வு பூர்வமாக தமது ஆதரவை வர்த்தகர்கள் வழங்கியிருந்தனர்.

அத்துடன் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பல்வேறு தரப்பினராலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.