தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் தொடரக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம்.
நாட்டிற்கு மேலாக மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் வீசக்கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.