
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று புதன்கிழமை காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றிருந்தது.
அதனையடுத்து, ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பை பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு ஈரான் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனதும், இலங்கை அரசாங்கத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.