மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 12 வயது மாணவன் கதிர்காமம், பகுதியில் உள்ள விகாரையில் தங்கிருந்த நிலையில் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்றுவந்த மாணவனே கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன், பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தனது பாட்டியோடு முரண்பட்ட நிலையில், 18 ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த மாணவன் புத்தளம் பகுதியில் உள்ள தேரர் ஒருவரால் கதிர்காமம் பகுதியில் உள்ள விகாரையில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சிறுவனின் தாய் எனக் கூறி பெண் ஒருவரை முன்னிலைப்படுத்தியதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்ட, குறித்த மாணவன் கடந்த 20ஆம் திகதி பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குறித்த மாணவன், குறித்த விகாரையில் இருப்பதாக கதிர்காமம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மாணவன் மீட்கப்பட்டுள்ளார்.
இதன்படி கதிர்காமம் பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சிறுவனை பிக்குவாக்க ஒப்படைத்ததாக கூறப்படும் தேரரை கைது செய்ய மதுரங்குளி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.