கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட போதைவஸ்துக்கு எதிராகவும் பசுமை வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட மரதன் ஓட்டமும் விழிப்புணர்வு ஒன்று கூடலும் கிளிநொச்சியில் மிகவும் எழுச்சி பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இனம், மதம் கடந்து கிளிநொச்சி வாழ் மக்களின் இயல்பு நிலை பற்றி சிறப்புரை ஆற்ற கத்தோலிக்க திருச்சபையின் அமலமரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இயக்குனர் அருட்தந்தை யா றமேஸ் அமதி அழைக்கப்பட்டிருந்தார். அவரது உரை மக்கள் குறிப்பாக இளையோருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் இனங்காட்டி இன்று எமது வாழ்விடங்களில் திட்டமிடப்பட்ட ஓர் இனவழிப்பு நடைபெறுகிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். சமூகத்தில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல்கொடுத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அருட்தந்தையின் காலத்துக்கு ஏற்ற இந்த எழுச்சிமிக்க உரை மக்கள் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் பல காலத்திற்கு பிறகு இத்தகைய நிகழ்வில் கலந்துகொள்ள தமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்நிகழ்வை ஒழுங்கு செய்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பிற்கு மக்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர். அத்துடன் மரதன் ஓட்டத்தில் வெற்றி பெற்ற இளையோர் களையும் வாழ்த்தி உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஓய்வுபெற்ற அரசு அதிபர், அரசு உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்விற்கு ஊட்டம் அளித்தனர். இத்தகைய நிகழ்வுகளே இன்று எமது மண்ணில் அரங்கேற வேண்டும் என்று பலரும் தங்கள் ஆதரவை நல்கி வருகின்றனர்.