கொவிட் 19இன் பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் முதலாவது கட்டத்தை நாம் நிறைவுசெய்துள்ளோம். தற்போதைய நிலையில் இலங்கைக்கு மூன்று கோடியே 28 இலட்சத்து 35,000 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்று 30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையினரில் நூற்றுக்கு நூறு சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோன்று 20-30 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் இரண்டு வீதமானோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உயர்தர வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு சைபர் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அந்தந்த பிரதேச அதிபர்கள், கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர்கள், பிரதேச சுகாதார சேவை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உயர்தர மாணவர்களுக்கு வழங்குவதற்காக தற்போதை நிலையில் எம்மிடம் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் காணப்படுகின்றன. எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் மேலும் 10 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் நமது நாட்டுக்குக் கிடைக்கப்பெறவுள்ளன.
அதற்கும் மேலதிகமாக நவம்பர் மாதம் 17 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்குக் கிடைக்கப்பெறவுள்ளன. அதேபோன்று நேற்றைய தினம் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் பைசர் நிறுவனத்துடன் விசேட இணக்கப்பாட்டுக்கு வந்தது. அதாவது மேலும் 14.5 பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்தது.
குறித்த தொகை தடுப்பூசியானது 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசியாக அல்லது பூஸ்டர் தடுப்பூசியாக பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கவுள்ள தடுப்பூசிகளை நீண்டநாள்பட்ட நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிபர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேபோன்று சுகாதார தரப்பினருக்கும் மூன்றாவது தடுப்பூசியாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாவது தடுப்பூசி என்ற அடிப்படையில் பைசர் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிட்டுளோம்.
அதேபோன்று சீன உற்பத்தியான சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாது என்று இளம் சந்ததி மத்தியில் ஒரு கருத்து பரப்பப்பட்டு வந்தது. இதன்காரணமாக சினோபாம் தடுப்பூசி பெற்றுக்கொள்வதிலிருந்து விலகியிருந்தனர்.
எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கிகரிக்கப்பட்ட எந்த தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டவர்களுக்கு அமெரிக்காவுக்கு வருகைதர முடியும் என்று ஐக்கிய அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் எனினும் நேற்றைய தினம் தெரிவித்திருந்தனர். சினோபார்ம் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை பெற்ற ஒன்று. அதேபோன்று அஸ்ட்ராசெனிக்கா உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை பெற்றவையாகும்.