சுமார் ஒன்றறை வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான 400க்கும் அதிகமான வாகனங்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பின்பு குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கமைவாக 300 சொகுசு வாகனங்களும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 121 வாகனங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் வாகனங்களில் அதிகமானவை அனுமதிபத்திரங்களுக்கு அமைவாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஹம்பாந்தோட்டையிலுள்ள வாகனங்கள் ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் காணப்படுகின்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச நிறுனங்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் குறித்த வாகனங்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் ஒன்றறை வருடங்கள் சென்றுள்ளதால், அவை பயன்பாடற்ற நிலையில் பழுதடைந்து வருவதாகவும் அவற்றின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகவும் வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சுங்க பிரிவின் பிரதி இயக்குநர் மற்றும் ஊடக பேச்சாளர் சுதந்த சில்வா கருத்துரைக்கையில், குறித்த வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை நிதி அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இருப்பினும், வாகனங்களுக்கான செயன்முறை குறித்து இறுதி முடிவை எடுக்க சுங்கத்துறைக்கு அறிவுறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.