






ஜீவநதி பதிப்பகத்தின் 350 ஆவது வெளியீடான குப்பிழான் ஐ. சண்முகனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) நூலினை எழுத்தாளரும் உளவியலாளருமான கோகிலா மகேந்திரன் அவர்களிடமிருந்து முதற் பிரதியினை குப்பிழான் ஐ சண்முகனின் சகோதரியான ரூபாவதி தங்கராசா (கீதா) அவர்களும், சிறப்பு பிரதியினை குப்பிழான் ஐ சண்முகனின் பெறாமகனான கந்தலிங்கம் கிருபானந்தகிருஸ்ணன் (கிருபன்) அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் வெளியீட்டுரையினை கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.பௌநந்தி அவர்களும்,
கருத்துரைகளினை யாழ். பல்கலைக்கழக சமூகவியல்துறை விரிவுரையாளர் இ.இராஜேஷ்கண்ணன் அவர்களும், இலக்கிய விமர்சகரும் ஆசிரியருமான சி. ரமேஷ் அவர்களும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து குப்பிழான் ஐ.சண்முகனின் நினைவுக் குறிப்புகள் நூலின் அறிமுகவுரையினை எழுத்தாளரும், சிரேஷ்ட மருத்துவருமான எம்.கே முருகானந்தன் அவர்களும்,
இறுதியாக ஏற்புரையினையும் நன்றியுரையினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார் அவர்களும் நிகழ்த்தினார்.
குறித்த நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், குப்பிழான் ஐ.சண்முகனின் உறவுகள், கரவெட்டி வாழ் மக்கள், வாசகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார், ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக குப்பிழான் ஐ.சண்முகன் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு நூலும், திருமதி.புனிதவதி சண்முகலிங்கனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக குப்பிழான் ஐ.சண்முகனின் இரசனைக் குறிப்புகள் நூலும் ஏற்கனவே ஐ. சண்முகனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வின் போது குப்பிழானில் வைத்து வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.