நுவரெலியா – ராகலை மத்திய பிரிவு பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் ஐவர் உடல் கருகி உயிரிந்துள்ள நிலையில், இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7ம் திகதி இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த தீவிபத்து இடம்பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு வயதான மோகன்தாஸ் எரோஷன் தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாளைக் கொண்டாடிய எரோஷனும் அவரது 11 வயது சகோதரர், 32 வயதான தாய் தங்கையா நதியா, 60 வயது தாத்தா மற்றும் 55 வயது பாட்டி ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் இன்றிரவு அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக 5 பேரினதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சட்டவைத்திய அதிகாரியால், ‘திறந்த தீரப்பு’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை, ‘திறந்த தீர்ப்பாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது விபத்தா அல்லது கொலையா என்ற ரீதியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தீயில் எரிந்த வீடு, இரண்டு பகுதிகளைக் கொண்டது, ஒன்று மதில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மற்றைய பகுதிகள் தகரங்களால் மறைக்கப்பட்டிருந்ததுடன் உள்ளே பொலித்தீன் உறைகளால் அறைகள் பிரிக்கப்பட்டிருந்தன.
இந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வாசல் கதவு மாத்திரமே இருந்தது. நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியிலிருந்த வீட்டை அண்மித்து பல வீடுகள் இருப்பதை காணமுடிந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் இத்தகையதொரு வீட்டினுள் தீப் பிடித்ததை வீட்டார் உணராமல் இருந்து எவ்வாறு? இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
குறித்த வீட்டில் வசிப்பவர்கள் பொதுவாக நள்ளிரவிலேயே உறக்கத்திற்கு செல்வார்கள் என அருகில் உள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், அன்றைய தினம் அவர்கள் வழக்கத்தை விட முன்னதாகவே தூங்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் பொதுவாக இரவு 11 மணிக்கு பின்பே உறங்கச் செல்வார்கள். வீட்டில் சத்தம் கேட்கும். எனினும், நெருப்பு பற்றி எரியும் சந்தர்ப்பத்திலும் சத்தமேதும் இருக்கவில்லை. மேலும் சம்பவம் இடம்பெற்ற நாளில் உயிரிழந்தவர்கள் நால்வர் ஒரே படுக்கையில் தூங்குவதைக் அவதானிக்க முடிந்தது. இது மிகவும் அசாதாரணமானது, ஏனெனில் வழக்கமாக இந்த படுக்கையில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் தூங்கின. எனினும், அன்று தீ விபத்து ஏற்பட்டபோது, படுக்கையில் நான்கு பேர் தூங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.