அதிகபட்ச சில்லறை விலை, வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வர்த்தகர்கள் விலை அதிகரிப்பு செய்வதை தடுக்க, தொடர்ச்சியாக அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்கு இலங்கையின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த இறக்குமதிகள், அரச துறைக்கு மட்டுப்படுத்தப்பட்டு, லங்கா சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் கிடைக்கச் செய்யப்படும்.வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில், கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த முயற்சி, அரிசியை ஒரு கிலோ 100 ரூபாவுக்கு குறைவான விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதும், வர்த்தகர்கள், அரிசிக்கான விலையை தொடர்ந்து அதிகரிப்பதைத் தடுப்பதுமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மியான்மரில் இருந்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியும், இந்தியாவிலிருந்து 100,000 மெட்ரிக் தொன் அரிசியும் இறக்குமதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.