உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சாய்ந்தமருது என்ற ஊரை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண குறிப்பிட்டார்.
சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அண்மையில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாங்கள் இன்டர்நெட் ஊடாக கூகுள் சாய்ந்தமருது என்ற சொல்லை தட்டச்சு செய்தால் உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்.இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களுக்கும் தெரியும்.
இதற்கு காரணம் சாய்ந்தமருது பகுதியில் ஸஹ்ரான் குழுவினர் மறைந்திருந்த செயற்பாடும் அங்கு இடம்பெற்ற தாக்குதலுமாகும்.
அத்துடன் முஸ்லீம்களினால் ஓதப்படும் குர்ஆனில் எங்கேயாவது தற்கொலை செய்வது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கேட்க விரும்புகின்றேன்.
மேலும் சில அடிப்படைவாதிகள் குர்ஆனில் குறிப்பிடப்படாத சில விடயங்களை திணித்து மார்க்க விடயங்களை பிழையாக வழிநடத்த முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.
இந்த குழுவினர்களிடம் இருந்து சிறுவர்கள், இளைஞர்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
மேற்குறித்த நபர்களிடம் இருந்து எமது சமூகத்தை நாங்கள் பாதுகாக்க முன்வர வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும்.
இவ்வாறான விடயங்களை தவிர்ப்பதற்காகவே நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையங்களில் அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 3 பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பணியகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.